குலகுரு மடங்கள்

Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 27. பேரூர் மேலை மடம்



பேரூர் மேலை மடம்
ஸ்ரீமது வேதாமார்க பிரதிஷ்டாபனாசார்ய வேதாந்தாசார்ய யமனியம ஆசன பிராணாயாம  பிர்த்தியா ஹாரதியான தாரணசமாதி  அஷ்டாங்கயோக நிரத  
ஞான சிவாச்சாரியார் ஸ்வாமிகள் 
ஸன்னிதானம்



பெரிய சுவாமியார்


காசிவாசி ஞானசிவாச்சாரியார்

பல்லக்கும் மேனாவும்

பொங்கலூர் நாட்டு குலகுரு :

காம்பிலி நதியின்  நிழலி கரையில் தண்ணீர் வற்றியதால், குருக்கள் பாளையத்தில் இருந்து வற்றாத ஜீவ நதி, காஞ்சி மா நதியாம் நொய்யலாற்று படுகையில் உள்ள பேரூர் மேலை மடத்துக்கு, கொங்க தேசத்தின், பொன் குலுக்கி(பொங்கலூர்) நாட்டின் குலகுருவான ஸ்ரீ ஞான சிவாச்சார்யார் சென்றார் என்பதை செப்பு பட்டையத்தின் வாயிலாக அறியலாம்.

பேரூர் மேல்மடத்துச் செப்பேடு

காலம்: 1532 Christian Era
அரசர்: அச்சுததேவராயர் (விஜயநகர - மதுரை நாயக்கர் காலம்)
தாராபுரத்தில் மதுரை தண்டநாயக்கர் ஸ்ரீவீரபாலய்யதேவர் 

ஸ்வஸ்திஸ்ரீமன் மஹாமண்டலேசுவரன் ராசகம்பீரன் ராசமார்த்தாண்டன் அப்பிரதிமவீர அரியபள படியார ஸ்ரீ வீர கிருஷ்ணராயர் அச்சுததேவ மகாராயர் ஸ்ரீ வீர அய்ய.... அப்பாச்சி அய்யர் அகாராச சாம்பூச்சிய பிருத்வி ராச்சிய பரிபாலன பண்ணாநின்ற கொங்குமண்டலத்து தாராபுரத்துச் சீமைக்குக் காவந்தரான ஸ்ரீ வீர பாலய்யதேவ மகாராசா பரிபாலனம் பண்ணி அருளாநின்ற கலியுக சகாப்தம் 4632க்கு மேல் செல்லாநின்ற கர வருஷம் சித்திரை மாதம் 15 தியதி வெள்ளிக்கிழமையும் ரோகனியும் பிரிதிநாம யோகமும் பாலவாகரணமும் பெற்றநாள் கொங்கு தாராபுரத்து ராசஸ்ரீ வீரபாலய்ய மகாராசாவும் வடபொங்கலூர்க்கா நாட்டில் காணியாளர்கள்

பேரூர் பெரியமடத்து ஊமைவாய் பேசவச்ச ஞான சிவாச்சாரிய சுவாமிகள் அவர்களுக்கு தரும சாசனப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்
கொங்கு மண்டலத்து வட பொங்கலூர்க்கா நாட்டில் அப்பாநயினான் அவினாசி அப்பனும் கொடுவாய் நல்லபெருமாளும் காட்டூர் தம்பிரானும் தோள அம்பர... யிவுச்சிப்பெருமாளும் கண்டியன்கோயில் பொன்னம்பலம் செட்டியார் கூத்தரும் வள்ளல் செட்டியார் சின்னப்பெருமாளும் வேலம்பூண்டியில் நல்லகட்டிக்காங்கயரும் குண்டடத்து சுவாமியார் ராசாவும் குறையூரில் ராசா உலகுடையபெருமாளும் காளிஆண்டார் வடுகப்பனும் காத்தார் நல்லமங்கையும் அங்கித்தொழுவில் அம்மையப்பன் அவிநாசிஅப்பனும் மற்றுமுண்டான காணியாளரும் பல்லகோயில் நல்லணராக்கியாரும் பிச்சாண்டான் தான்தோன்றியப்பனும் ஆண்டதூத்தர் சோமியாரும் நல்லபெருமாள் நல்லபெருமாள் மற்றுமுண்டான காணியாளரும்

புத்தூர் வளர்ந்துவாச்சி தளபட்டராயரும் மற்றுமுண்டான காணியாளரும் தென்பள்ளி அப்பனும் நல்ல பெருமாள் ராக்கியாரும் மற்றுமுண்டான காணியாளரும் செம்புத்தொழுவில் பூமிபாலரும் ஆண்ட பெருமாளும் மற்றுமுண்டான காணியாளரும் பெருந்தொழு ஆண்டபெருமாள் தம்பியாரும் மற்றுமுண்டான காணியாளரும் அல்லாளபுரத்து முதலியார் நல்லணனும் இராசா சித்தம்பலமும் தாயாண்டார் நல்லணனும் மற்றுமுண்டான காணியாளரும்

புத்தரச்சல் குடையளாநாதனும் தன்னம்பெருமாள் ராசாவும் மற்றுமுண்டான காணியாளரும் நக்கன்பாடியில் அழகன் பெருமாள் அமக்கப்பெருமாளும் இவர் அனைவரும் கூடி பேரூர் நாட்டில் பேரூர் பெரிய மடத்தில் ஞானசிவாச்சார்யசுவாமியார் அவர்களுக்கு அய்யன் பண்டார திருநெல்வேலிசுவாமி பூசைக்கு பொங்கலூர்க்கா நாட்டில் காணியாளர் அனைவரும் ராசஸ்ரீ அவர்களும் கூடி கிரகண புண்ணிய காலத்திலே கொடுவாய் சீமையில் நாலு மத்தியத்துக்கு சேந்த நிழலிக் கரைக்கு வடக்குனூர் மார்க்கத்தில் விட்ட நிலம் ஒரு மாத்திரையும் பத்துக்குளிக்காடும் சகிரண்ய உதக உதகபூர்வமாக தாரைவார்த்துக் குடுத்தோம்

இதற்கு எல்லை கயிலக்காவின் தெற்கு கரைக்கு வடக்கு கிழக்கு கோயில் காட்டுக்கு வடக்கு வடகிழ் மூலைக்கு சிலுகங் காட்டில் பாதியும் வடக்கு இட்டேரிக்குத் தெற்கு மேற்கு பருடி சிணத்துக்குக் கிழக்கு வடமேல் மூலைக்கி இட்டேரிக்குத் தென்மூலைக்கு களணை ஊஞ்சல் வரிக்குக் கிழக்கும் இந்த நாற்பங்கு எல்லைக்கு உள்பட்ட நஞ்சை புஞ்சை தோட்டம் தொடிகை மேல்நோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் மான்படு காடு தேன்படுவரை மீன்படுசுனை நிதி நிட்சேபமும் மற்றும் சுவாமியங்களும் இவரே சர்வ மானியமாக அனுபவித்துக் கொள்ள கடவாராகவும்

இந்த நாற்பங்கு எல்லைக்கு உள்பட்ட சுங்கம் சோதினை மக்கம் மகமை கத்தி காவலி மக்கம் பட்டறை எப்பேர்பட்ட சகல சுவாமியங்களும் தாங்களே சர்வ மானியமாக சந்திராதித்தர் உள்ள வரைக்கும் அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இப்படி சம்மதித்து இந்து தரும சாசனப்பட்டயம் எழுதிக் குடுத்தோம் பொங்கலூர்க்கா நாட்டில் ஞானசிவாச்சார்ய சுவாமி யாருக்கு திருநெல்வேலிநாத சுவாமிக்கு தரும சாசனப் பட்டயத்துக்குத் தின்மை நினைத்தவன் கங்கைக் கரையில் காரம்பசுவைக் கொன்ற தோஷத்திலே போவாராகவும்

செந்தமிழோர்க்கு ஈந்தனவும் தேவர்க்கொன் றீந்தனவும்
அந்தணர்க்கு நீரால் அளித்தனவும் - வெந்த
இரும்புண்ட நீரின் எழுதுமே ஈசன்
அரும்புண்ட ரீகத் தயன்

இப்படிக்கு எழுதின நன்மைக்கு வடபொங்கலூர்க்கா நாட்டின் கணக்கு திருவப் பிராமணரில் வசிஷ்ட கோத்திரத்தில் ஆனையப்பன் எழுத்து இந்தப் பட்டயத்துக்கு ராயஸ்ரீ வீரபாலய்ய தேவர் எழுத்து ஒப்பிதம் பெரிய அவினாசியப்பன் எழுத்து முத்து சின்ன அவிநாசியப்பன் எழுத்து வடுகப்பன் எழுத்து காங்கயன் எழுத்து நாதர் எழுத்து பெரியபெருமாள் எழுத்து நம்பிரான் எழுத்து பெரும்பழன நல்லணன் எழுத்து அல்லாளபுரத்து நல்லணன் எழுத்து தென்பழனியப்பன் எழுத்து ஆண்ட பெருமாள் எழுத்து.

-தாராபுரம் துக்குடி காங்கயம் தாலுக்காவுக்குச் சேர்ந்த நிழலி மிட்டா குருக்கள்பாளையத்தில் இருக்கும் சோழிய பிராமண சாதியில் ஞான சிவாச்சாரி எனப்பட்ட மடாதிபதியிடத்தில் இருக்கப்பட்ட தாமர சாசனத்தினுடைய நகல் (கோலின் மெக்கின்ஸீ ஆவணங்கள் - (D 294), Oriental Manuscript Library, Chennai)


சர்க்காரால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட குருக்கள் பாளையம்


                                                                                 பழுதடைந்து கிடக்கும் குருக்கள் பாளையம் மடம்


1933 வருட சஞ்சார ஸ்ரீமுக பத்திரிக்கை 


ஸ்ரீ மத் ஞானசிவாச்சாரியார்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சர்மா 1913ம் ஆண்டு மே மாதம் 16ந் தேதி அவதரித்தார்.
விளையும் பயிர் முளையிலேயே என்பதற்கேற்ப இவரது அறிவாற்றல் அனைவரையும் வியக்க வைத்தது.
ஒன்பது வயதடைந்த போது, உலகம் அறியாத வயதாகவும், இறைவனை அறிந்த வயதாகவும் இருந்தது. தேவையின் அவசரம் கருதி பேரூர் மேல்மட பீடாதிபத்யம் இவரை அழைத்தது. பாலசன்யாசி பட்டம் ஏற்றார். 1922ம் ஆண்டு ஜூன் மாதம் 7ந் தேதி, புண்ணியஸ்தலாமான ஸ்ரீ கருணாம்பிகை சமேத ஸ்ரீ அவினாசிலிங்கேஸ்வர ஸ்வாமி குடியிருக்கும் அவினாசியில் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகுடம் சூட்டியதுடன் பட்டணப் பிரவேசம் துவங்கிவிட்டார். கூடவே வேதம் போதிக்கும் வேதாந்தியரும், ஆகம விதிகளைத் தெளிவாக்கும் ஆன்மீகப் பெரியோரும் பயணப்பட்டனர். பயனத்தினூடே இவர் பாடம் கற்றார். கசடறக் கற்றபின் அந்த கல்விக்குத் தக்கபடி நடந்தார். இவரது கற்பூர அறிவு கண்டு சொற் கூற இயலாது வியந்து போற்றினர்,

இவர் 43 ஆண்டு காலம் நல்ல முறையில் குருபீடத்தை அலங்கரித்து வந்தார். மடத்தில் பல நிலையான கட்டிடங்கள் கட்டி மடத்தின் மூலதன மதிப்பை உயர்த்தினார். தொடர்ந்து சஞ்சாரம் செய்து பல சிஷ்யர்களின் நன்மதிப்பை பெற்றார். சிவ தீட்சையளித்து அவர்களது வாழ்க்கை வளம்பெற செய்தார். மற்ற மடாதிபதிகளின் பாராட்டினை பெற்றார். 1965ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ந் தேதி சித்தியாகி சிவனுடன் கலந்தார். திருமடத்தில் அடக்கமாகி கோயில் கொண்டு இன்றும் அருளாசி வழங்கி வருகிறார்.


பிரம்மச்சார்யம்

குருவின் திருவடி வணங்கி முன்னோர்களால் அடைந்த மடத்தின் அருமை பெருமைகளை இனி காண்போமாக. பிரம்மச்சர்யம் கடைபிடித்தல் இமடத்திற்க்கான தகுதியாகும். திருமண பந்தத்திலிருந்து விடுபட்ட வாழ்க்கை முறை உயர்ந்தது. பால் உணர்வு நீங்கிய நிலையில், சிந்தனை தெளியும், சீரான உடலும் அமையப்பெறுகின்றது. இன்ப நுகர்ச்சி மனிதனை மிருக நிலையில் வைக்கிறது. அதனை அருள் நாட்டமாக மாற்றிவிட வேண்டும். கற்பு நிலை காப்பது அதுவேயாம்.
பதினான்கு வருட காலம் மணம், மொழி, மெய்யால் பிரம்மச்சர்யம் கலயாத்திருப்பவர்க்கு மேதை என்ற புதிய நாடி உண்டாகிறது. அறிவு தெளிவதற்கு அது துணையாகிறது. இதனால் பல சித்திகள் சாத்தியாமகிவிடுகின்றன. இராமாயண இலக்குவனை இங்கு நினைக்கத் தோன்றுகிறது.
அத்தகைய பிரம்மச்சர்யம் மேற்கொண்ட குரு மேல்மடத்தில் இருந்து அருளினை வழங்குகின்றார். ஓதல் ஓதுவித்தனை செவ்வனே செய்து வருகிறார்.

ஆராதனை தெய்வம் :

பேரூர் மேல்மடத்தில் ஆராதனை மூர்த்தியாய் ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனமர் ஸ்ரீ சால்வாடிஸ்வரர் இருக்கிறார்.
திருக்கோயில் அல்லாது சொந்த பூஜையில் பயன்படுத்தும் சிவலிங்கத்தை உற்சவர் என்று குறிப்பிடுவார்கள். இங்குள்ள உற்சவருக்கு நீண்ட நெடும் வரலாறு உள்ளது. வழி வழியாக பூஜித்து போற்றும் லிங்கம் இங்கு ஸ்படிக லிங்கமாக விளங்குகிறது.தேன் வண்ணத்தில் இதன் அளவும் பெரியது, அமைப்பும் அழகு. அன்றாட வழிபாடு குறிப்பிட்ட காலத்தில் தவறாது செய்து வருவது இதன் சிறப்பு. உரிய மந்திர உச்சாடனத்துடன் ஒரு மூர்த்தம் ஆயிரம் ஆண்டுகளாக ஆராதனை செய்து வருவதால் அதற்கென ஏற்படும் சான்னித்தியம் அளவிடற்கரியதாகும்.
வேத வரிகளுக்கு மந்திரம் என்ற பெயர் உண்டு. இந்த ஒலியில் ஏற்படும் சக்தி அபரிதமானது. ஏழாயிரம் ஆண்டுகளாக ஒரு ஒலிதொடர் இந்த உலகில் தொடர்ந்து ஒரே ஸ்ருதியில் ஒலித்து வருகிறதென்றால் பிரமிப்பு ஏற்படுத்துகின்றது. அது வேத மந்திரங்கள் தான். வேத வியாசரும், போத விசுவாமித்திரரும் சொல்லி வந்த அதே ஸ்ருதி, அதே இசை நயம், அதே ஏற்ற இறக்கங்களில் மாறாத ஒரு இசையுடன் இன்றும் நின்று நிலவி வருகிறது என்னும் போது. அது இறை சக்தியல்லாது வேறு என்னாவாய் இருக்கும்?
அந்த மந்திரங்களை சமயாசாரிகள் தவாறது முறையாக ஓதி அர்ச்சனை, ஜபம், பூஜை ஆகியவைகளை செய்து வந்த மடம் பேரூர் மேல்மடமாகும். மடத்தில் உள்ள உற்சவரான ஈசனுக்கு அத்தனை ஈர்ப்பு இன்னையில்லாச் சக்தியும் இருக்கிறது. இது இன்றளவும் நமக்கு கண்கூடாக தெரிகிறது.


பேரூர் மேலை மடத்தின் பெருமை

பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்கதான மேல்மட வரலாற்றில் குருபீடம் அலங்கரித்த பெருந்தகைகளின் பேராற்றல் கண்டு பெரும் வியப்படைகிறோம். அவற்றுள் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை இங்கு நினைவு கூர்வோம்.

பறந்து வந்த பல்லக்கு

கொங்க தேசத்துடன் ஒட்டியது மலையாள தேசம். மடத்தின் சிஷ்யர்கள் அங்கும் உள்ளனர். குரு சன்னிதானம் சஞ்சாரம் சென்று சிஷ்யர்களுக்கு அனுகிரகம் புரிவது வழக்கம்.அதன்படி ஒரு முறை கொச்சி மகாராஜாவின் பகுதியில் நமது குருபீடம் ஸ்ரீமத் ஞான சிவாச்சாரிய ஸ்வாமிகள் வருகை புரிகின்றார். அப்போதெல்லாம் குரு சன்னிதானம் பல்லக்ககில்(சிவிகை) வருவது தான் வழக்கம். வரவேற்ப்புக்கு காத்திருந்த மன்னர் மற்றும் மக்கள் முன்னிலையில், ஆட்களால் தூக்கி நடந்து எடுத்து வரும் பல்லக்கு, சிறிது தூரம் ஆகாயத்தில் பறந்து வந்து இறங்கிற்று. இந்த அதிசயம் கண்ட மன்னனும் மக்களும் பெரிதும் வியந்து போற்றி குருவின் திருவடி வணங்கி நின்றார்.



எட்டிகனி இனித்தது

அடர்ந்த காட்டுபகுதியை கடந்து வரும் வேளை. அந்த காட்டில் எந்த சீடன் மகேஸ்வர பூஜை செய்ய காத்திருக்கிறான்?
நண்பகல் நல்ல பசி. என்ன செய்வது என்று எல்லோருக்கும் திகைப்பு. பார்த்தார் ஞானகுரு. அருகில் இருந்தது எட்டிமரம் மட்டுமே. அதில் எட்டிகநிகளும் இருந்தன.  அதை பறித்து தின்று பசியாற்றும்படி கூறினார். எட்டி என்பது மிக கசப்பானது. மற்றதை ஒப்பிடும் போது கூட எட்டிகசப்பு எப்படி உண்பது என்பர். அதை சாப்பிட கூறுகிறாரே !
எப்படியோ துணிந்து பத்தும் பறந்து போகும் பசிகொடுமையில் எட்டிகணியை சேகரித்து உண்ணத் துவங்கினர். என்ன ஆச்சரியம்? சுளித்த முகம் மலர்ந்தது. சுவைத்த நாவு இனித்தது. எட்டி தன்மைக்கு நேர்மாறாக தேவாமிர்தமாக இனித்தது. பொதுவாகவே பசி ருசி அறிவதில்லை. இவர்களுக்கோ கடும் பசி. கன்னலின் சுவையில் கனிகள். வயிறு கொள்ளும்மட்டும் தின்றனர். குருவின் திருவடி வணங்கி நின்றனர்.


நதிநீர் விலகிய அதிசயம்

பேரூரில் தற்போது இருக்கும் நொய்யல் நதி அன்று காஞ்சி மா நதி என்றழைக்கபட்டது. நதியின் நடுவே சிறு திட்டுகளாய் மண்மேடு இருக்கும். ஸ்ரீ ஞான சிவாச்சாரியார் ஒருமுறை ஆற்றின் நடுவே அமர்ந்து தேவபூஜை செய்தார். அனைவரும் பூஜையில் ஈடுபட்டிருந்தனர். தேவையான பொருட்கள் மற்றும் சிறப்பு வந்ததது. ஹோமதிர்க்கான சாமான்கள் அனைத்தும் ஒருங்கே சேர்ந்து குறித்த நேரத்தில் பூஜையும் துவங்கியது. நேரம் ஆக, ஆக வெள்ளம், மேல் வெள்ளம் வந்து பூஜை பொருட்களை அடித்துச் செல்லும் அளவு நீர்மட்டம் உயர்ந்து எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஸ்ரீ ஞான சிவாச்சாரியார் இது கண்டு எவ்வித பரபரப்போ பதட்டமோ அடையவில்லை. ஈசனை நினைத்தார். உலகிற்குச் செய்யும் இறை பணிக்கு இயற்கையே இடையுறா? பூஜை நல்லபடி முடிய வேண்டுமென எண்ணினார். இறைவனை வேண்டினார்.
எண்ணியது, திண்ணியரான வலிமை மிக்க நமது குலகுருவல்லவா? எனவே அவர் எண்ணியது நடந்தது. வெள்ள நீர் பூஜை நடக்கும் இடத்தை விட்டு இருபுறமும் ஒதுங்கி சென்றது. தொடர்ந்து எவ்வித குறுக்கீடுமின்றி வழிபாடும், பூஜையும் நடந்தது.மடத்தின் புகழ் மக்களிடையே மேலும் பரவியது.


வழியறியாதவன் விழிபெற்ற மகிழ்ச்சி

ஸ்ரீ ஞான சிவாச்சாரியார் அவர்கள் நித்திய பூஜை முடித்து அடியார்களுக்குப் பிரசாதம் வழங்கி கொண்டிருந்தார். நறைந்த கூட்டம், நீண்ட வரிசை, இம்மையில் இருள் நீங்கவும் மறுமையில் ஒளி வீசவும் ஆச்சாரியாரின் அருளாசி வேண்டிக் காத்திருக்கிறது மக்கள் கூட்டம். கூடத்தில் சலசலப்பு.இடித்துத் தள்ளி கொண்டு இவன் குருவை நோக்கி முன்னேறி வருகிறான். மற்றவர்கள் இருப்பதை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆம், அவனது ஒரு கண் பார்வையற்றது.இன்னொரு கண் பார்வை குறைவு. விழியற்றவனுக்கு பார்வை !
அது தான் அவன் வேண்டுகிறான். குரு மகா சன்னிதானத்தின் முன்னர் சந்தனமும், விபூதியும் தானே இருக்கிறது. வாரி எடுத்தார் சந்தனத்தை, வைத்து அப்பினார் அவன் கண்களில், அதற்க்கும் மேலே சிவாய சிவ மந்திரம் ஜெபித்து வெண்ணீறு பூசினார். அவனது கண்களில் சீரான சிதளம் பரவியது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதயம் குளிர்ந்தது. எட்டாத கண் பார்வை கிட்டியது. இறைவன் நேரில் வந்து உதவுவதில்லை. குருமகான்கள் மூலம் நம்முடைய குறைகளை தீர்க்கிறான் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
“ஞானத்தை விளக்கை யேற்றி நாடியுள் விரவ வல்லார், ஊனத்தை ஒழிப்பார்” (தேவாரம் 4:45:3)


நகராத தேர் நகரந்தது

பாடல் பெற்ற ஸ்தலாமான ஸ்ரீ அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தேர் மிக பெரியது. மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் பெரிய திருவிழா நடக்கும்.
முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்ட திருஸ்தலம். ஸ்ரீ அவினாசிலிங்கேஸ்வரரை அலங்கரித்து, பவனிவரும் காட்சி கண்கொள்ளாது. மக்கள் வெள்ளம் திரண்டது. தேர் வடம்பிடிக்கவும், வழிபடவும் ஏரளாமானோர் திரண்டிருந்தனர். தீய எண்ணம் கொண்ட மந்திரவாதிகள் தேர் நகராது மந்திரத்தால் கட்டிவிட்டனர். வடத்தை பிடித்து தூக்கி இழுக்க யாராலும் இயலாது எனக் கூறினர்.
அப்போது பொங்கலூர் நாட்டு குலகுரு ஸ்ரீ ஞானசிவாச்சாரியார் அங்கு வந்து இருந்தார். அண்டத்தை இயக்கம் நாயகனின் தேர் அசையாமல் நிற்பதா? இறைவனை மனதில் இறைஞ்சி, இருக்கும் இடத்திலிருந்து நகராத தேர் நடக்க வேண்டும் என்று வேண்டினார். நாள்தோறும் நமசிவாயத்தை ஓதி, ஓதுவித்து வந்த நாவால் இவர் கூறியவுடன், நகராத தேர் நகர்ந்தது. துரிதமாய் நான்கு வீதிகளிலும் ஓடியது. தீய எண்ணம் கொண்டோரின் தீவினை அவர்களை சுட்டது.உள்ளம் ஒடுங்கினர்.உண்மை சக்தி கண்டு நடுங்கினர். தேரோடும் தெருவெங்கும் மக்கள் ஆராவாரம். பார் முழுதும் தார் கொண்டு குலகுருநாதரின் தாள் வணங்கிற்று.

மரணமுற்ற மாடு, ஆடு உயிர் பெற்றது

  
தோட்டத்து கிணற்றிலிருந்து நீர் இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சுவார்கள். இப்பொழுது மின்சார இயந்திரம் பயன்படுகிறது. மின் இணைப்பு வராத அந்தக் காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மாடுகளை தான் பயன்படுத்தினார்கள். தோலினால் செய்த பார் எனும் தோற்பை தயாரித்து கயிற்றினால் கட்டி,நுகத்தடியில் பொருத்தி ஏற்ற இறக்கமான பாதையில் மாடுகளைப் பின் நடத்திச் செல்வதன் மூலம், பரி கிணற்றினுள் சென்றும், நீர் நிறைந்தவுடன் மாடுகள் முன்னோக்கி வரும் பொது பரி மேலே வந்து வாய்க்காலில் நீர் கொட்டும்படியும் செய்வர்.
நம்பியூரில் நடந்தது என்ன என பார்ப்போம். ஏற்றம் இறைப்பவர் மாட்டை முன்னும் பின்னுமாக ஒட்டி எப்போதும் போல அன்றும் நீர் பாய்ச்சும் பனி நடந்து கொண்டிருந்தது. வழக்கமாக வந்து போய் கொண்டு இருந்த மாடுகளின் இயக்கம் தீடிரென நின்றது. சரிவான பாதையில் அவ்வாறு மாடுகள் பாதியில் நிற்கும் வாய்ப்பே இல்லை. நீருடன் பரி மேலே வரும் போது சாதாரணாமாக நிறுத்தவும் முடியாது. ஆனால், பரி நின்று விட்டது. எல்லோரும் பார்த்தனர். விவசாய பெருமக்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அங்கு முகாமிட்டிருந்த பேரூர் மடத்தின் பெருந்தகை, ஞான குரு சன்னிதானம், தான் அன்றாடம் வழிபடும் ஸ்ரீ சால்வாடிஸ்வரரை வேண்டினார். என்ன அதிசயம்? மயங்கி நின்ற மாடுகள் உயிர்பெற்று இயங்கின. நீர் இறைக்கும் பணி தொடர்ந்தது.
மக்களின் குறை தீர மகேசனை நிறையுடன் நினைத்து வேண்ட எல்லாம் நிறைவேறும் என்பதை உலகுக்கு இதன் மூலம் உணர்த்தினார்.
இதுபோன்று மலையப்பாளையம் புதூரில் செத்த ஆடு உயிர்த்தெழுந்தது. புதூரில் ஒரு சலவை தொழிலாளி செல்ல பிராணியாக ஒரு செம்மறி ஆட்டினை வளர்த்து வந்தார். ஒரு நாள் எதிர்பாராமல் நாகம் தீண்டி, விஷம் ஏறி ஆட்டின் உயிர் பிரிந்தது. பிரியமான ஆட்டின் இழப்பு அவருக்கு பெரியதாகபட்டது. எல்லோருடைய குறைகளையும் நிவர்த்திக்கும் குருமகா சன்னிதானத்தின் திருவடி தொழுது தன் குறையை கூறினான். அப்பர் பெருமான் விஷம் தீண்டிய பாலனை எழுப்பியது போல நம் குருநாதர் கருணை உள்ளத்தோடு ஆட்டை உயிர்பெற செய்தார்.
இது “கருடன் உருவங்கருதும் அளவிற், பருவிடம் தீர்ந்து பயங்கொடுமா போல்” இருந்தது. பாம்புக்கு பகை கருடன், இந்த கருட பாவனை“ ஆதி பௌதிக கருடன், ஆதி தைவித கருடன், ஆதியான்மிக கருடன் என வகைப்படும். உலகில் காணும் கருடன் ஆதி பௌதிக கருடன், அதை தெய்வமாக வைத்து தியானத்து கணிக்கும் மந்திரம். ஆதி தைவிக கருடன. அந்த மந்திரத்தினுள் நின்று பயன் தருவதாகிய சிவசக்தி ஆதியான் மிக கருடன். இதனை முறையாக கற்றுணர்ந்து, சிறப்பு பயிற்சி பெற்ற நம் குலகுருவின் மந்திரக்கண் கொண்டு பார்த்ததாலே பாம்பின் விஷம் இறங்க காரணமாயிற்று.

ஊமைக்கு பேச்சு, சீமைக்கு பெருமை

அவன் பிறவி ஊமை, ஆம், பேசாத வாய், கேட்காத செவி, ஆனால் கண்ணும், கருத்தும் கூர்மை. புத்தியுள்ளவன், இறைபக்தி மிக்கவன். அவன் பேசினால் ஊருக்கு நல்லது.ஆனால் அது இயலுமா? நாட்கள் கடந்தன. அவனுக்கென்ற நாளும் வந்தது.
பார் போற்றும் பரஞானம் மிக்கவரான ஸ்ரீ ஞான சிவாச்சார்யா ஸ்வாமிகளிடம் பேசாதவனை அழைத்து வந்தனர். ஞாநியின் சித்தம் இந்த ஞாலத்தின் விடியல். குளித்து முடித்து வந்தவன், குனிந்து வணங்கி வெண்ணீறு பிரசாதம் வேண்டி கைமீது கைவைத்து பவ்வியமாக நிற்கிறான். மகானின் காந்த பார்வை அவன் கண்களை ஊடுருவியது. செயலற்று நின்றவனை நேர் எதிரே அமர செய்கிறார். அவர் திருமுகத்தையே பார்த்து கொண்டிருக்கிறான்.
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி, அன்னை உமா மகேஸ்வரி காளியின் வடிவில், படிப்பறிவில்லா பாமரனை பலரும் இகழும் மூங்கையனை பேச வைத்த நிகழ்வு நம்முன் நிழலாடுகிறது.
அண்டத்தின் முதற் சொல் ‘ஓம்’ பிண்டத்தின் முதல் சொல் ‘அம்மா’ அந்த அம்மாவின் அகரம் அன்னை பயிரவியாம். ‘அகர முதலாகிவளர்’ ஆனந்த ரூபியே ! ஆதி கடவுரின் வாழ்வே’ என்பார் அபிராமி பட்டர். காளியின் கருணையால் பேச்சு வந்தவன், ஓடினான், ஆடினான், அன்னை மீது பாடினான். அவனை மகா கவி காளிதாஸ் என்று உலகம் அழைக்கும். நமது பேரூர் மடாதிபதி எதிரே அமர்ந்தவனிடம் ‘அம்மா’ என்று சொல்ல தூண்டினார். அவர் நாவில் குடி கொண்ட களிமக்ளின் கடாச்த்தில் அவனும் முயற்சித்தான்.முடிவில் வெற்றியும் பெற்றான்.
ஊமையன் பேசிய பேச்சை ஊரும், உலகும் கேட்டது. மடத்தின் பெருமையும், புகழும் வானோங்கி நிற்க இது பெரிதும் காரணமாயிற்று. இதற்க்கு சான்றாக உள்ள கல்வெட்டு சாசனத்தை காணலாம்.


காலத்திற்க்கும் நிற்கும் கல்வெட்டு

பேரூர் ஸ்ரீ பட்டீஸ்வரர்  ஸ்வாமி திருக்கோயில் உட்பிரகாரம். தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஸ்ரீ தட்சனா மூர்த்தி சன்னிதி. கல்லால மரத்தின் கீழிருந்து இறைவன் செவ்வையாக நான்கு முனிவர்களுக்கு வேதங்களின் மூலக் கருத்தினை அறிவுரையாக கூறும் திருக்காட்சி.
“நன்றாக நால்வர்க்கு நான் மறையின் உட்பொருளை
அன்று அழிந் கீழிருந்தங்கு அறமுறைத்தான்” என மணிவாசக பெருமான் மனமுருகுவார் அல்லவா ! அந்த தட்சிணாமூர்த்தி சன்னதியி ஓட்டிவரும் பின்புற சுவரில் இந்த சிலாசாசனம் உள்ளது.
உலகுக்கு உபதேசம் செய்த இறைவனின் சன்னதியில் இன்றும் தொடர்ந்து அப்பணியில் ஈடுபட்டு வரும் ஸ்ரீமத் ஞான சிவாச்சார்யா ஸ்வாமிகள் அருளாசி வழங்கி வரும் மேல் மடம் மற்றும் பசு மடத்தின் குறிப்புகள் வட்டெழுத்துக்களில் கல்வெட்டு சாசனமாக காண்கிறோம். மேல் மடத்தின் நீண்டதொரு காலத்தையும், நிலையான புகழையும் எடுத்துகாட்டுவதாக இது அமைகிறது.


மடத்தின் பெருமை

எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம்
     என்றே உணர்ந்திட நன்றே உணர்த்திட
கொங்கு நாட்டின் கோயில் பெருநகர்
     கோவைக் கருகே பேரூர் தலமிதில்
மங்காப் புகழுறும் மடமொன்று நிறுவி
     மலையாளம் வரை எல்லை வகுத்த
பொங்கும் ஆன்மிக ஆற்றல் படைத்த
    பொறைமிகு ஞான சிவமே போற்றி !
ஒன்பது வயதினில் பட்டம் ஏற்று
     ஒன்றியே வேத பாடம் படித்து
என்னே பண்டிதர் வியந்து நிற்க
     நன்றே கற்றார் நாவலர் ஆனார்
நாமகள் நாவில் நடமே புரிந்தால்
     துன்றிய அடியவர் குலமே துளிர்த்திட
தூயவன் பெயரால் தீட்சை அருளினார் !
அன்புடன் வழிபட்ட ஆராதனை மூர்த்தி
     அருள்மிகு சால்வா டீஸ்வரப் பெம்மான்
இன்புற மனதில் இலன்கியே நின்று
     இவ்வுலகில் பல அதிசயம் புரிய
துன்புற்ற ஊமை துணிவாய்ப் பேச
     துயரில் செத்தவை எழுந்தே நடக்க
மன்பதை யுடனே மன்னனும் போற்ற
     மடத்தின் பெருமை அறிந்தது உலகு.


- பேரூர் கோயிலில் உள்ள பழமையான கல்வெட்டிலிருந்து.


மடத்தில் உள்ள ஆத்மார்த்த மூர்த்திகள் (குலதெய்வங்கள்):

1.      வெள்ளி விநாயகர்
2.      பஞ்சலோக தக்ஷனா மூர்த்தி
3.      சோமா ஸ்கந்தர்
4.      காந்திமதி அம்பாள் – எட்டு கையுடன் மகிஷாசுர மர்த்தினி ரூபத்தில்
5.      நெல்லையப்பர் (சால்வாடி ஈஸ்வரர்) – ஸ்படிகலிங்கத்தில் நந்தி மேல் அமைந்துள்ளது.
6.      நடராஜர்
7.      சிவகாமி அம்பாள்
8.      வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர்
9.      ஸ்படிக சூரியன்
10.  ஸ்ரீ கிருஸ்னர்
11.  ஸ்படிக சந்திரன்
12.  சாலி கிராமம்


மட சிஷ்யர்கள் :

கொங்க வெள்ளாளர்கள்:
கொடுவாய் ஒதாள கோத்திரம் (கொலுசேனை மன்றாடியார்) 40 ஊர்
குண்டடம் ஒதாள கோத்திரம் – 32 ஊர்
பெருந்தொழுவு ஒதாள கோத்திரம் – 18 ஊர்
கண்டியன்கோயில் ஒதாள கோத்திரம் – 7 ஊர்
வேளராசி புத்தரச்சல் குழாயர் கோத்திரம் (தேவ மன்றாடியார்) – 32 ஊர்
உகாயனூர் சாத்தந்தை கோத்திரம் (உலகுடை மன்றாடியார்) 40 ஊர்
செம்புதொழுவு செம்பன் கோத்திரம் - 5 ஊர்
அல்லாலபுரம் பூச கோத்திரம்  - 3 ஊர்
அரசூர் மாட கோத்திரம் – 7 ஊர்(அரசூர், நீலாம்பூர்)
தொரவலூர் செல்ல கோத்திரம் - 40 ஊர்
சின்ன தாராபுரம் பவள கோத்திரம் – 2 ஊர்
பால வெள்ளாளர்கள் :
வடவள்ளி கிராமம் – 11 ஊர்
எம்மாம்பூண்டி – 7 ஊர்
நரம்புகட்டி கவுண்டர் :
காசிபாளையம் – 7 ஊர்
செட்டியார் :
எம்மாம்பூண்டி 501ஆஞ்  செட்டியார் – 11 கிராமம்


காடம்பாடி செட்டியார் 
பாலக்காடு மூத்தன்மார்கள் : மலையாளம் சென்ற மூத்தான்மார்
மூத்தான்மார்களது மூத்தான்தரை கண்ணகி பகவதி கோயில் வலிய ஆராட்டு உற்சவத்தில் பேரூர் மேல் மடத்தின் குரு செய்யும் பூஜை முதலாவதாகும்.







பொங்கலூர் நாட்டு காணியாளர் குலகுரு:

மலையாளம் சென்ற பாலக்காடு மூத்தான்மார்
மூத்தான்மார்களது மூத்தான்தரை கண்ணகி பகவதி கோயில் வலிய ஆராட்டு உற்சவத்தில் பேரூர் மேல் மடத்தின் குரு செய்யும் பூஜை முதலாவதாகும்:
சொடுக்கவும்: மூத்தான்மார் திருபுராய்க்கல் கண்ணகி பகவதி கோயில் இணையதளம்

காடாம்பாடி செட்டியார்

நரம்புகட்டி கவுண்டர் சில கோத்திரங்கள்


போன்: 98422 08724

முகவரி:
பேரூர் கோயிலுக்கு நேர் பின்புறம்,
கோவை
தளம்: http://perurmatam.blogspot.in/




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.