கொங்கு குலகுருக்கள்-
54.பட்டையக்காளிபாளையம் மடம்
இலங்காமாண்பன்
கண்டசாத்தன்
ரணப்புலியன்
எப்புலிமாதயன்
|
ஶ்ரீ அகஸ்திய மகாமுனி
|
பட்டையக்காளிபாளையம் வேட்டுவர் குலகுரு மடத்துப் பட்டையம் -1 (படி: பொன் தீபங்கர்)
குருகுலத்தாருடைய உற்பத்தியும் அவர்கள் குலங்களும்
சர்வலோகமான பூலோகத்திலே அகண்ட பூமண்டலம் தெற்கு கிழக்கு வடக்கு மேற்கு உத்தரதேசம் தெக்ஷண தேசம் அறுபது நாள் பயணமடுத்ததற்கு நடுவில் கல்லாறு பனியாறு நெய்யாறு பாலாறு கங்கை யமுனை கோதாவரி சிந்து நதி சரசுபதி காவேரி பவானி வைகை என்று இப்படி அநேக நதியுண்டு இந்த அன்பத்தாறு பூமண்டலத்தில் ஏழு தீவுகள் உண்டு அந்த தீவினில் நாவன்னப் பெருந்தீவுக்கு சூரிய குலத்து ராசாக்களில் ஒன்பது பேர் சந்திரகுலத்து ராசாக்களில் ஏழு பேர் ஆக இந்த பதினாறு ராசாக்களும் பகர்ந்து அரசுபுரிந்து வருகிற நாளில் கிரேதா யுகத்திலும் திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் இந்த ராச்சியபாரம் ஒரு குடைக்கீழாக சூரியகுலத்தில் வளசக்கரவர்த்தி ராசாவும் சந்திர குளத்தில் சச்சேந்திர வரகுணராசாவும் இப்படி தங்கள் ராச்சியத்தில் ஆறில் ஒரு கடமை கொண்டு அசையா மணிகட்டி இப்படி ஆறில் ஒரு கடமை கொண்டு கோதானம் பூதானம் சுறவை தானம் அன்னதானம் சொர்ணதானம் இப்படி ராச முறைமை தப்பாமல் நடத்தி வருகிற நாளையில் துவாபர யுகத்தில் சூரிய குலத்தில் குரோதசற்கிரிவாசன் என்றொரு ராசாவும் சந்திர குலத்தில் வரகுண பாண்டியன் என்றொரு ராசாவும் இவ்விரண்டு திறத்தாரும் ராஜ்யபாரம் தாங்கி வரும் நாளிலே அறுபத்துநாலு வருஷம் மலைமாரி இல்லாமல் கல் மாரியும் மண் மாரியும் பொழிந்து புனவாசல் காடாய் அழிந்து கிடக்கிறதை வரகுண பாண்டியன் கண்டு அதிக கோபம் கொண்டு அக்கினி பேராச்சீரி மூச்செறிந்து நாம் இரண்டு திறத்தரும் ராச்சிய பாரம் செய்கிற நாளையில் இப்படி மழை பெய்யாமல் செடியான பூடெல்லாம் தீய்ந்து காய்ந்து போக காரணம் ஏன் என்று சச்சேந்திர வரகுண பாண்டியன் தன்னுடைய சச்சுமிகன் என்ற மந்திரியை அழைத்து நாம் வருமளவும் சீமை காரியங்களில் ஒன்றாவது தாட்சி வராமல் அரசு புரிந்திருக்கச் சொல்லி கட்டளையிட்டு இருந்தான். தெய்வலோகத்துக்கு போய் தேவர்களுடனே எதிர்த்து சண்டை தொடுத்து வருணனைப்பிடித்து வர வேண்டும் என்று மனதில் உன்னிதமாக எண்ணித் தன்னுடைய ஆனை குதிரை சதுரங்க சேனைகளையும் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று ஆனை மேல் பேரணியும் குதிரை மேல் பேரிகை சின்னம் காழை கொம்பு முரசு தாரை இப்படி பதினெட்டு மேள வாத்தியம் முழங்க குரோதசற்கிரிவாசன் என்கிற ராசாவையும் கூட படையெடுத்து வரச் சொல்லி இரண்டு திறத்தாரும் வருகிற அதிர்ச்சி கண்டு தேவலோகங்கள் எல்லாம் மதி கெட்டு வலசுவாங்கி ஓடுகிற போது தேவேந்திரன் தேவாதி தேவர்கள் 48,000 கோடி ரிஷிமார்கள் அஷ்டவசுக்கள் கின்னரர் கிம்புருடர் கெருடகாந்தருவர்கலெல்லாம் கூடியிருக்கிற சபையில் இந்த அதிர்ச்சியும் ஆரவாரங்களும் ஏதொன்றும் விசாரியாமல் எல்லோரும் எதிர்த்து நிற்க மாட்டாமல் யாவரும் கூடி கைலாய மலை சார்ந்த வடபாரிசத்தில் போய் மறைந்து விட்டார்கள். அப்படி தேவாதி தேவர்கள் ஓடுகிறதைச் சச்சேந்திரதுங்க வரகுண பாண்டியனும் கண்டு தானும் தன் சேனை காலாட்களுடன் தொடர்ந்து போய் வருணனை வளைத்து பிடித்துக் கொண்டு வரகுண பாண்டியராசனும் திரும்பும் காலையில் சிவலோகதயாபரனாகிய பராபரவஸ்துவாயிருக்கிற சாக்ஷாத் கிருபை கடலாகிய பரமேஸ்பரரும் இந்த பூலோகத்தில் மதுராபுரியில் இருக்கிற வரகுண பாண்டியன் படையெடுத்து வந்து வருணனை முடுக்கி அடித்ததை கண்டு இந்த விபரங்கள் எல்லாம் அறிந்து சந்தோஷமாய் கிருபை தந்து சடைமுடி சன்னியாசி போல வடிவு கொண்டு வரகுண பாண்டியன் முன்பாக வந்து நிற்கிற போது பாண்டியராசனும் தன்னுள்ளே
கடவுள் என்று அறிந்து கொண்டு ஆசாரத்துடனே வலம் வந்து சாக்ஷாத்காரப் பொருளே என்று இரண்டு பாதகமலங்களைத் தனது நெத்திலொற்றிக்கொண்டு எழுந்து கைகட்டி நிற்கிறதை சடைமுடி சன்யாசியாக வந்து வந்த பார்பதி சமேதரான சாக்ஷாத்பரம்பொருளாகிய கடவுள் வேகு சந்தோஷமாகி மனதில் கிருபை வைத்து வரகுண பாண்டியனைப்பார்த்து வாரும் பாண்டியனே இன்று முதல் உமக்கு நாம் கொடுத்த பெயர் தெய்வமுடி பாண்டியனாகும் என்று கடவுள் தன் கய்யார முடியும் சாத்தி பிரபலமான பேரையுங் கொடுத்து மறுபடியும் பார்பதி சமேதரான கடவுள் ஆனவர், "தெய்வமுடி பாண்டியா" என்று கூப்பிட்டுத் திருவாய் திறந்து திருவுளம் பற்றி அருளுவதைச் சொல்லக்கேளும் "தெய்வமுடி பாண்டியா உன்னுடைய தேசத்திலே வெகுநாளுக்கு வெகு நாளாய் மழை இல்லாமல் கல் மாரியும் மன்மாரியும் பெய்து புனவாசல்க் காடாய்க் கிடக்கிறது சுபாவந்தான். இனிமேல் உன்னுடைய தேசத்தில் சூரிய குல வம்சங்கள் எல்லாம் வர்மமாய் அருகி தொலைந்து போகும். அது எப்படி என்றால் சூரிய குல வம்சத்திலே பரசுராமன் என்கிற ராஜகுமாரன் பிறப்பான் அந்தப் பரசுராமனும் சூரிய குல வம்சத்தை எல்லாம் அதம் செய்து கொன்று போடுவான் ஆனபடியினாலே சூரிய குலங்கள் அருகிப் போய்விடும். நீயும் பூலோகத்தில் இருந்து தெய்வலோகத்துக்கு வந்து வருண பகவானையும் பிடித்து பின் கட்டாய் கட்டியது சரி இனிமேல் உன்னுடைய பூலோகத்தில் மிகுதியாய் மிகுந்து அழிந்து போகும். அப்படி சிறிது காலம் இருக்கிறபோது தாடகை என்று ஒரு ராட்சசி பிறப்பால் அவள் வயிற்றில் கைகேசி என்று ஒரு பெண் பிறக்கும் அந்த கைகேசி வயிற்றில் ராவணன் பிறப்பான் அவனும் அனேக ராச்சியம் பண்ணுவான். அதன் பிறகு தசரத மகாராசன் வயிற்றில் ராமபத்திர சுவாமி பிறப்பான். சனகராசன் வயிற்றில் சீதாலட்சுமி என்றொரு பெண் பிறந்து ராமபத்திர சுவாமியாரும் திருக்கல்யாணம் முடித்துக் கொண்டு மறுபடி அயோத்திக்கு
வந்து கைகேசி சொல்வதைக் கேட்டு வனவாசம் போய் பன்னிரண்டாண்டில் ராவணாதி ராட்சச வேட்டையாடி திரும்ப அயோத்தியை நாடி ஒன்பதினாயிரத்து எண்பத்தாறாண்டு பூமி முழுவதும் ஒரு குடைக்கு ஆண்டு வருவார். மறுபடி அநேக நாளுக்குப் பிறகு சந்திர வம்ஷத்திலே காந்தாரி என்று ஒரு பெண் பிறக்கும். குந்தமாதேவி என்றும் ஒரு பெண் பிறக்கும். இவர்கள் இருவர் வயிற்றிலேயும் துரியோதனாதிகளென்று பஞ்சபாண்டவர்கள் என்றும் இரண்டு ஆண் சந்ததி பிறப்பார்கள் இவ்விருதிறத்தாருக்கும் அநேகநாள் வர்மம் பிறந்து உம்முடைய சந்திர வம்சங்களெல்லாம் அழிந்து அருகிப் போய்விடும். அதின் பிறகு நாடு நகரியாகி யமன் என்கிறவனையும் மட்டடக்க கேட்கிறதற்கு காராள கங்கை குல வங்கிஷத்தில் பிறந்தவர்கள் களப்பாளன் என்றும் அச்சுதன் என்றும் உத்தண்டன் என்றும் வீரன் என்றும் இவர்கள் மகா தவங்களை உடையவர்கள். அதிக வரங்கள் பெற்றவர்கள் ஆகையால் அவர்களை செயிக்க உங்களால் முடியாது. நீயும் இப்போது நம்மிடத்திற்கு தெய்வலோகத்திற்கு வந்ததற்கு நாம் தெய்வமுடி பாண்டியன் என்று பெயர் கொடுத்ததற்கும் உனக்குத் துணையாக உறுதியுடன் நீயும் ராச்சியம் பண்ணுகிறது. இம்மூன்று குலத்தரசர்களும் நம்முடைய திருக்கரத்திலே பிறந்த திருக்கச்சயன் வெட்டுவன் என்றும், நம்முடைய திருநேத்திரத்தில் பிறந்து சுட்டிறைச்சி தின்று, சுனையில் நீர் குடித்து எச்சிலிட்டு முத்தி பெற்ற திருவெட்டுவன் என்றும், நம்முடைய பூங்காவனத்தில் பிறந்த பூவலுவன் என்றும், நம்முடைய காவனத்தில் பிறந்த காவலுவன் என்றும், நம்முடைய மாஞ்சோலையில் பிறந்த மாவலுவன் என்றும், இவர்கள் அஞ்சு பேரும் நம்முடைய தவப்புத்திரர்கள் அதிக பராக்கிரமம் உடைய பிள்ளைகள் உங்களுக்கு உறுதியாக தருகிறோம். பின்னும் இவர்கள் அஞ்சு பேருக்கும் துணையாக இவர்கள் குலத்தார் லட்சத்தெட்டு வீரர்களும் மகா பத்திரகாளி அம்மையையும்
கண்டசாத்தர் இலங்காமாண்பன் ரணப்புலியன் எப்புலிமாதயன் இவர்களுக்கு அகஸ்திய மாமனியையும் மேலாக தருகிறோம். நீயும் இவ்விடத்திற்கு வந்ததற்கு மிக்க சந்தோஷம் ஆச்சுது. இந்த காரணங்கள் எல்லாம் முடிய துவாபரயுகம் ஒருபாகம் பதினாலு வருஷம் இருக்கிறது" என்று சாமியார் திருவுளம் பற்றி அருளின பின்பு தெய்வமுடி பாண்டியனும் வெகு பயபக்தியோடு அஞ்சிப்பயந்து கடவுளை ஸ்தோத்திரம் செய்து முக்கால்வலம் வந்து மூவிருகால் தண்டன் இட்டு கைகட்டி வாய் பொற்றி அஞ்சி பயந்து நிற்கிறதைக் கண்டு சர்வலோக தயாபரன் ஆகிய கடவுளும் பார்த்து, "வாரும் ஐயா தெய்வமுடி பாண்டியனே என்று தாங்கி எடுத்து இனிமேல் பயப்படாதே உனக்கு உறுதி தந்து இருக்கிற போது இனிமேல் அச்சம் தேவையில்லை. இனிமேலும் உங்களுடைய சீமையில் தெய்வத்தலங்கள் எல்லாம் பூஜை நிறைவேற்றி வைக்கத் தக்கதாகவும் தேவதாயம் பிரம்மதாயம் சிவ பத்தர் குருபத்தர் தர்மதானம் புண்ணியங்கள் எப்போதும் விலங்கத்தக்கதாகவும் பூங்காவனங்களும் தண்ணீர் பந்தலும் சாலை கரையும் மேன்மேலும் நடத்தி வைக்க வேண்டியது. அப்படியே உங்கள் சீமையில் மழைமாரியும் பொழிந்து காராளர் மற்றும் உள்ள பிரசனங்களும் செல்வம் பொருந்தி இருப்பார் என்றும் ராச்சியபாரம் தாங்கி இருப்பாய் என்றும் வரமும் கொடுத்து வருணனையும் விடுவித்துக்கொண்டு நீயும் உம்முடைய தேசம் போ" என்று சொல்லி அனுப்பி விட்டு தாமும் கைலாயம் எழுந்தருளினார். தெய்வமுடி பாண்டியனும் திருக்கச்சய வேட்டுவராசனும் இந்த நாலு பேர் தம்பி துணைவரும் உடுப்பூர் ஆகிய ராச்சியத்தையும் கொடுத்து இவ்விடத்திலே ராச்சியபாரம் தாங்கி இருங்கள் என்று சொல்லி தெய்வமுடி பாண்டியனும் தன்னுடைய மதுராபுரி பட்டணம்
வந்து சேர்ந்த பின்பு தெய்வத்தலத்துக்கெல்லாம் ஒன்றாலொன்று குறைவு வராமல் சுவாமியார் கட்டளை இட்டபடி பூசை காரியம் நிறைவேற்ற தக்கதாக கட்டளையிட்டான். அதன் பிறகு துவாபர யுகத்திலே இந்த காரணங்கள் எல்லாம் முடித்து முடிந்து பதினாலு வருஷம் ஒரு பாகம் முடிந்ததின் பிறகு சூரியகுல வம்மிஷங்கள் எல்லாம் வர்மமாய் துலங்கி அருகிப் போனபடியினாலே சூரிய குலத்தில் காஞ்சிப்பெருமாள் என்று ஒரு ராசகுமாரன் பிறந்து சமர்த்தனாகி நாம் நாம் கல்யாணம் செய்து கொள்வோம் என்றால் நமது சூரிய குலமே அரிகிப் போன படியால் இனி சந்திர குளத்தில் பாண்டிய நிறத்தில் பெண் கேட்க சுமூகன் என்கிற மந்திரியையும், தமனன் என்கிற மந்திரியையும் காஞ்சிப்பெருமாள் அரசன் பார்த்து, "நீங்கள் இருவரும் மதுராபுரி பட்டணம் போய் வரகுண பாண்டியனை கண்டு நம் இருப்பையும் நாம் பெண் கேட்கச் சொன்னதாகவும் சொல்லி பெண்ணையும் தீர்மானம் செய்து வாருங்கள்" என்று அனுப்ப இரண்டு மந்திரி மாறும் மதுராபுரி பட்டணம் வந்து பாண்டியராசனையும் கண்டார்கள். கண்டவுடன் பாண்டியராசன், "நீங்கள் எந்த ஊர் எந்த தேசம் என்று கேட்டான். அவர்களும் நாங்கள் வடதேசம் எங்கள் அரசன் சூரிய குலத்து காஞ்சிப்பெருமாள் ராசன் என்று சொல்லுவார்கள். ஆகையால் எங்கள் ராசன் தங்கள் குமாரத்தியை விவாதம் முடித்துக் கொள்ள கேட்டு வரச் சொல்லி எங்களை அனுப்ப நாங்களும் இவ்விடம் வந்தோம்" என்று சொல்லக்கேட்டு அந்த தெய்வமுடி பாண்டியனும் அதிக கோபமாகி அந்த மந்திரிமார்களை அடித்து துரத்தும்படி காதலர்களுக்கு உத்தரவு செய்தான். அந்த காவலாள்களும் ராசா உத்தரவுப்படி மந்திரி இருவரையும்
அடித்து மதுராபுரி தாண்டுகிற வரையிலும் பிடரியைப் பிடித்து நெட்டி தள்ளி விட்டார்கள். இப்பால் மந்திரிகள் இருவரும் இந்திர பட்டணம் திரும்பி வந்து காஞ்சிப்பெருமாள் ராசனைக் கண்டு சுவாமி நாங்களும் பாண்டியராசனை பெண் கேட்டதில் எங்களை தன்னுடைய ஆள்களை விட்டு மதுராபுரி பட்டணம் முடிகிற வரையிலும் துரத்தி விடுங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே எங்களை அவ்வாட்கள் துரத்தி விட நாங்களும் புறப்பட்டு இந்திரபுரி பட்டணம் வந்து தங்களை கண்டோம் என்று சொல்ல, அந்த காஞ்சிப்பெருமாள் ராசன் கேட்டு மனதில் அதிக கோபமுற்று தனக்குத்தானே தேடி நல்லது இருக்கட்டும் என்று சுமுகன் தமனன் என்கிற மந்திரி கையிலே தம்முடைய சீமையெல்லாம் விசாரிக்கச் சொல்லி கட்டளை இட்டு தானும் வேஷம் மாறிக் கொண்டு அநேக திரவியத்தையும் எடுத்துக்கொண்டு தானும் மதுராபுரி பட்டணம் வந்து சேர்ந்தான். அதின் பிறகு காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனும் ஒரு தாவில் இருந்து இளப்பாரி மதுராபுரி பட்டணம் நோக்கி வரும்போது இந்திரபதி கண்ணாளனும் அந்த ராசகுமாரனை நின்று கேட்க அந்த ராசனும், "வாரும் இந்திரபதி கண்ணாளனே" என்று கூப்பிட்டு ஏது சொல்வான் என்றால், "நான் வடக்கே இந்திரபட்டணம். நானும் சூரிய குலத்தரசன் எங்கள் சனங்கள் எல்லாம் வர்மமாய் அருகி போனபடியினால், இந்த பட்டணத்திற்கு நாமும் ஒரு காரியங்களை குறித்து வந்தேன்" என்று சொல்லக்கேட்டு அந்த கண்ணாளனும் கைகட்டி வாய் பொற்றி, "சுவாமி அவர்கள் நினைத்தபடி அப்படியே முடித்து தருகிறேன்" என்று விண்ணப்பம் செய்தான். பின்பு அந்த ராசகுமாரனுக்கு விடுதி அமைத்து சில பிராமணர்களைக் கொண்டு அரிசி பருப்பு முதலானதும் கொடுத்து சமையல் முதலானதும் செய்து ராசகுமாரனுக்கு போடும்படி கட்டளையிட்டான் அப்படியே ஆகுது என்று அறுசுவையோடு ராசகுமாரனுக்கு அன்னமளித்தார்கள். ராசகுமாரன் சாப்பிட்டு கையலம்பி உட்கார்ந்து இருக்கையில் இந்திரபதி கண்ணாளன் சந்தன புனுகு களப கஸ்தூரி முதலிய வாசனை திரவியங்கள் அளித்து அதன் பிறகு பாக்கு வெற்றிலை முதலியதெல்லாம் கொடுத்து நின்றான். அப்படி மூன்று நாள் ராசாவுக்கு வேண்டிய உபசாரம் செய்கிறபோது ராகுசமாரனும் தான் கொண்டு வந்த திரவியமெல்லாம் ஒரு குத்துவிளக்கு முடிக்க வேண்டும் என்று இந்திராபதி கண்ணாளனுக்கு சொல்ல, "சுவாமி தேவரியினுடைய சித்தத்திற்கு தகுந்தபடி அப்படியே நடத்தித் தருகிறேன்" என்று விழுந்து தெண்டன் இட்டான். அப்போ ராசகுமாரனுக்கு அதிக சந்தோஷமாகி தான் கொண்டு வந்த திரவியம் எல்லாம் கையில் கொடுத்து கொடுத்து அருகில் வரவைத்து ராசன் சொல்வான் "வாரும் பிள்ளாய் கண்ணாளனே இந்த திரவியத்தை எல்லாம் உருக்கி பதினெட்டறை உள்ள குத்துவிளக்கு தங்கத்தினாலே முடிக்க வேண்டும்" என்று ராசன் தாம்பூலம் எடுத்து இந்திரபதி கண்ணாளன் கையில் கொடுத்தான். அப்படியே ராசன் சொற்படிக்கு பதினெட்டு அறை உள்ள குத்துவிளக்கு முடிக்க வேண்டும் என்றும் இந்த பட்டணத்து சந்திரகுலத்து தெய்வமுடி பாண்டியராசனுக்கு
சுவையாக அவருடைய சமூகத்திலே கொண்டு போய் கொடுத்து வர வேண்டும் என்று மனதிலே யோசித்து கொண்டு தெய்வமுடி பாண்டியராசனுக்கு அறிக்கை செய்து வரவேண்டும் என்று காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனையும் கூட்டிக்கொண்டு இந்திரபதி ஆசாரியும் பாண்டியராசன் பக்கலுக்கு வந்து, "சுவாமி பாண்டியராசனே" என்று துதித்து போற்றி கைகட்டி ஆசாரி நிற்கிற போது பாண்டியராசன் பார்த்து சொல்லுவான். "வாரும் பிள்ளாய் இந்திரபதி கண்ணாளனே. உன்னுடன் வந்து நிற்கிறவன் ஆரு?" என்று ராசன் கேட்க, அந்தக் கண்ணாளனும், "சுவாமி உறன்முறையான், வடக்கே வடதேசம் தோர்காபுரி பட்டணம். சுவாமியவர்கள் பாதத்திலே காத்துக்கொண்டிருக்கிறாப்போல ஆனைகுந்தி அயோத்திமாநகருக்கு அதிபதியாகிய சூரியகுலத்து ராசன் காஞ்சிப்பெருமாளுடைய ராசகண்ணாளனிவன் பேர்" என்று சொன்னான். அதின்பிறகு பாண்டியனும் பார்த்து, "நீயும் இந்தக் கண்ணாளனென்கிற பிள்ளையும் என்ன சோலியாய் நம்மண்டைக்கு வந்தீர்கள்?" என்று ராசன் கேட்டபோது, இந்திரபதிக் கண்ணாளனும் கைகட்டி வாய்பொற்றி, "சுவாமியடியேன் பயந்து சொல்கிறதோப் பயப்படாமல் சொல்கிறதோ" என்று கேட்கத்
தெய்வமுடி பாண்டியனும் மகா சந்தோஷத்துடனே, "வாரும் பிள்ளாய் இந்திரபதி கண்ணாளனே நீ யாதோன்றுக்கும் பயப்பட வேண்டாம் சொல்லும்" என்று கேட்கும்போது அப்போது ஆசாரியும், "அடியேன் தேவர் உடைய அரண்மனைக்கேற்ற பதினெட்டறை உள்ள குத்துவிளக்கு முடிக்க வேண்டும் என்று சுவாமி அவர்கள் பாதத்தில் அறிக்கை செய்ய வேண்டும் என்று வந்தேன்" என்று ஆசாரியும் சொல்ல
ராசனும் மகா சந்தோசத்துடனே, "அப்படியே குத்துவிளக்கு முடித்துக் கொண்டு வருவாய்" என்று தாம்பூலம் எடுத்து இந்த இரண்டு பேருக்கும் இவர்கள் இருவரும் வாங்கிக் கொண்டு பின்னும் இவர்களுக்கு அரிசி பருப்பு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி ராசன் சொல்ல அப்படியே அரிசி பருப்பு வாங்கிக்கொண்டு பாண்டியராசா அனுப்பி கொடுக்க இருவரும் வீடு வந்து சேர்ந்து அப்படியே அன்று முதல் பதினெட்டறை உள்ள குத்து விளக்கை பண்ணி முடித்தார்கள். அதன்பின்பு இந்த சேதி தெய்வமுடி பாண்டியனுக்கு அறிக்கை செய்ய வேண்டும் என்று இந்த ஆசாரியும் பாண்டியராசன் முன்பாக போய் விழுந்து தெண்டனிட்டான். "இது ஏது காரியம்?" என்று ராசன் கேட்க ஆசாரியும் கைகட்டி வாய் பொற்றி, "தேவரீர் இடத்தில் சொன்னபடிக்கு குத்துவிளக்கு முடிந்திருக்கிறது அதை எடுத்துக்கொண்டு வரத்தக்கதாக ஆட்களும் கோலார் வண்டியும் கொடுத்து அனுப்பினால் அடியேன் உங்களுத்திரப்படிக்கு நம்ம அரண்மனைக்கு கொண்டு வந்து வைக்கிறேன்" என்று சொன்னான். அரசனும் மகா சந்தோஷத்துடனே அனேக ஆள்களுடன் கோலார் வண்டியும் கொடுக்கச் சொன்னான். மேளதாளத்துடனே தாசியர்கள் நடனமாட தக்கதாகவும் கட்டளையிட்டு கண்ணாளன் பிறகு கூட்டி அனுப்பித்து ஆசாரி வீட்டுக்கு இவர்கள் எல்லாம் கூட்டி வந்து தன்னுடைய சூஸ்த்திரத்தினாலே பதினெட்டறை உள்ள குத்துவிளக்குள் சூரிய குலத்து ராஜனான காஞ்சிப்பெருமாளை வைத்து மறுபடி அந்த குத்து விளக்கை பார்த்த பேர்களுக்கெல்லாம் எப்போதும்
போலிருக்கிறது போல சூஸ்திரம் பண்ணிக்கொண்டு அந்த குத்து விளக்கை பூட்டி மேள தாளம் நடனம் கீதத்துடனே இந்த மதுராபுரி பட்டணத்தில் உள்ள சனங்கள் அனைவர்களும் அறிய நாலு வீதிகளும் சுத்தி கொண்டு வந்து பாண்டியன் சமூகத்திலே கொண்டு வந்து வைத்தான் இந்திரபதி கண்ணாளன். அப்போது பாண்டியராசனும் பதினெட்டறை உள்ள குத்து விளக்கைக் கண்டு சந்தோஷத்துடனே இந்திரபதி கண்ணாளனுக்கு வெகுமதியும் கொடுத்து அநேக திரவியம் அனேக மானியமும் கொடுத்து மகா பிரியத்துடனே நம்ம ராசகுமாரி இருக்கிற அரண்மனைக்கு இந்த குத்து விளக்கை கொண்டு போய் வைக்க சொல்லி கட்டளையிட்டார். அப்போது அந்த தாதிகள் எல்லாம் ஓடி வந்து அந்த குத்து விளக்கை எடுத்துக்கொண்டு போய் அந்த ராசகுமாரத்தி படுத்து கொள்கிற பள்ளியறைக்குள்ளே கொண்டு போய் வைத்தார்கள் அந்த ராசகுமாரத்தியும் வெகு சந்தோசமாகி கெருவத்துடனே மகிட்சி கொண்டு பத்திரமாற்று அபரஞ்சி குத்து விளக்கை அல்லும் பகலும் அனுதினமும் ஒளிவு பார்த்துக் கொண்டிருந்தாள். ராசகுமாரத்தி இப்படி இருக்கிறபோது ஒருநாள் வேளையில் இந்த ராசகுமாரனும் அந்தக் குத்து விளக்கு அறைக்குள்ள இருந்து கொண்டு இந்த ராசகுமாரத்திக் கூட பேச்சு கொடுத்தான். அந்த ராசகுமாரத்தியும் வெகு சந்தோசத்துடனே அந்த குத்துவிளக்கு அறையை விடுவிக்கச் சொல்லி ராசகுமாரன் சொல்ல, ராசகுமார்த்தியும் குத்துவிளக்கு அறையை விடுத்தாள். உடனே ராசகுமாரனும் சர்வாபரணத்துடனே கோடி சூரிய பிரகாசம் போல் இருந்தான். அப்போது ராசகுமாரத்தியும் ராசகுமாரனும் ஒருவருக்கொருவர் இணங்கி சரசசல்லாப லீலா வினோதத்துடனே வாழ்ந்திருந்தார்கள். பகலில் குத்துவிளக்கில் ஒளிந்து இரவில் குத்து விளக்கை திறந்து இருவரும் லீலா வினோதத்துடனே சேர்ந்து இருப்பார்கள். இப்படி இருக்கிற நாளில் அரசகுமாரத்திக்கு கர்ப்பம் உற்பத்தியாயிற்று. அந்த வர்த்தமானம் அவளை சுற்றி இருக்கிறார் தாதிகள் கண்டு ராசகுமாரத்தி இருக்கிற கேவலத்தையும் கண்டு வெகுவாய் அஞ்சி பயந்து நடுநடுங்கி இந்த ராசகுமாரத்தியை அறியாமல் அந்த பள்ளியறையை சுற்றிவர விடுகிற வரையிலும் தூங்காமல் விழித்திருந்து பார்த்தார்கள். அப்படி அவர்கள் பார்த்தும் ஒன்றும் தோன்றாமையால் ராசாவின் தேவியார் காலில் விழுந்து தண்டனிட்டு எழுந்து இருந்து அஞ்சு பயந்து நடுநடுங்கி, "என் தாயே பயந்து சொல்லட்டோ? பயப்படாமல் சொல்லவோ?" என்று கேட்கும்போது அந்த ராசாவின் தேவியாரும் இந்த தாதியை பார்த்து "என்னடி தாதி? உங்களுக்கு வந்த ஆபத்து காரியம் ஏதோ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்." என்று நெஞ்சை தட்டி கேட்கும் போது அந்தத் தாதியும் ராசாவின் தேவியை பார்த்து சொல்லுவாள் "தாயே நம்ம ராசகன்னி என்னமோ ஏதோ செய்கை போல கர்ப்ப உற்பத்தியாய் இருக்கிறாள் போல் எங்களுக்கு தெரியவந்து. இந்தக் காரியங்களை குறித்து சும்மா ஒரு காரியம் துணிந்து சொல்லாதது என்று இந்த ரெண்டு மூன்று மாதம் அல்லும் பகலும் விழித்து இல்லாமல் இருந்து பார்த்துக் கொண்டிருந்தும் எங்களுக்கு தோன்றவில்லை தாயே. நாளுக்கு நாள் ராசகுமாரிக்கு உடல் மெலிந்து, முகம் வெளுத்து, அடி வயிறு பெருத்து, போசனம் எப்போதும் சாப்பிடுகிறது போல இல்லாமல் அதுவும் குறைந்து இருக்கிறது தாயே" என்று தாதி சொல்லக்கேட்டு ராசாவின் தேவிக்கு கோபமாகி "அடி தாதிமார்களே நீங்கள் அப்போது பிரியாமல் இருக்க இப்படி வர காரணம் ஏதெ"ன்று தேவியும் சீறி ஒரு பார்வை பார்த்து," இந்த மூன்று நாளைக்கு ராசன் உடன் நான் சொல்லவில்லை.
இந்தக் காரியத்தை எந்த ரூபத்திலே ஆனாலும் கண்டுபிடித்து சொன்னால் இல்லாவிட்டால் உங்களுக்குத் தக்க புத்தி யான் சொல்லி ஆக்கினை செய்வேன் என்று சொன்னாள். இது ராசன் கூட சொல்லியது நம்பத்தக்கதில்லை, " என்று ராசாவின் தேவி சீறிச் சொன்ன செய்தியை கேட்டு தாதிகள் எல்லாம் மனதில் கிலேசமுற்று "நாம் இந்த வருத்தமானம் எப்படி கண்டுபிடிக்கிறது" என்று யோசிக்கிற போது அதில் ஒரு தாதியானவளுக்கு அறிவும் நினைவும் வந்து "அடியே தாதிமாரே! இங்கே வாருங்கள் நான் ஒரு உபாயம் சொல்கிறேன். நீங்கள் நான் சொன்ன மேரைக்கு கேட்கிறோம் என்றால் சொல்கிறேன்" என்றாள். "அப்படியே நீ சொல்லுகிற காரியம் எல்லோரும் கேட்கிறோம்" என்று சொன்னார்கள். அது சொல்லக்கேட்டு அந்த தாதியானவள்," நாம் எத்தனை விதத்துடன் பார்த்தாலும் அரூபமாய் வருகிறதும் தெரியவில்லை, தற்சுரூபமாய் வருகிறதும் தெரியவில்லை. நாம் எல்லோரும் கண் துயிலாமல் இன்றைக்கு விடிகிற பரியந்தம் பலகணி வாசலிலே கண்ணோட்டமாய் பார்த்திருக்க வேண்டும்" என்று அந்த தாதியானவள் சொல்ல இது எல்லோரும் நல்ல யோசனை என்று இருந்தார்கள் அப்படியே இந்த ராசகன்னிகைக்கு செய்து வருகிற ஊழியம் எல்லாம் ஒன்றால் ஒன்று தாட்சி வராமல் அப்படியே முறை முறையாக செய்து பணிந்து நின்றார்கள். அதின் பிறகு பொழுது உறங்கிப் போனதன் பின்பு ராசக்கன்னிக்கு தின வரிசைக்காரிக்கு போசனமும் பொரிகரியும் எப்போதும் கொண்டு வந்து வைக்கிறாப் போல் வைத்து புனுகு சந்தனம் சவ்வாது களப கஸ்தூரிகள் கொண்டு வந்து வைத்து பொன் தட்டத்தில் வெற்றிலை பாக்கும் கொண்டு வந்து வைத்து அவரவர்கள் சுத்தி வர பணிந்து நிற்கிறதை ராசகுமாத்தி கண்டு ," முறைப்படி செய்த காரியம் நன்றாக ஆச்சு இனிமேல் நீங்கள் எல்லோரும் சாப்பிட்டு அவரவர் சயனித்துக் கொள்ளுங்கள்" என்று ராசகுமாரத்தி சொல்ல மகா சந்தோஷ பிரீதியாய் வெளியில் வந்து நின்று கொண்டு எல்லோரும் கூடி, " சோறு என்ன தண்ணி என்னவென்று மனதில் கிலேசமுற்று இனி நாம் இத்தனை பேரும் கண்டுபிடித்து அல்லவோ நமக்கு பெருமை? இல்லாதிருந்தால் இத்தனை நாள் இவளிடத்தில் இருந்ததற்கு மரியாதை சேதம் வருகிறது சந்தேகம் இல்லை" என்று
மனதிலே கிலேசமுற்று எல்லாரும் தலை கவிழ்ந்து உறங்கி இருக்கும் போது அதிலே ஒரு தாதி எழுந்திருந்து, "விடிகிற வரையில் யோசித்து நினைந்தாலும் ஒரு பலன் இல்லை நன்மை வந்தாலும் ராகுசமாரத்தியினாலே பொல்லாங்கு வந்தாலும் கண்டு பார்ப்போம். இனி பெருமையும் நம்முது சிறுமையும் நம்முது" என தங்களுக்கு தாங்களே தேறி , இன்றைக்கு விடிகிற வரையிலும் விழித்துக் கொண்டு அவரவர்கள் போசனமருந்தி வந்திருந்து கொண்டு அவரவர்கள் பலகணி வாசலிலே கண்ணோட்டமா பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்திரபதி கண்ணாளன் கொண்டு வந்த குத்துவிளக்கு உள்ளிருந்து ராசகுமாரன் வெளியே வந்து ராசகுமாரி கூடக்கூடி சுகமாய் ஏகபோகமாய் இருக்கிறதை தாதிகள் கண்டார்கள். "இப்படி குத்து விளக்குக்குக்குள்ளிருக்கிற அதிசயத்தை நாம் கண்டோமே. இப்படி இருக்க எல்லோரும் கூடி சந்தோஷமாய் இனிமேல் ராசகுமாரத்திக்கு பெருமையானால் நமக்கு பெருமை, அவளுக்கு சிறுமை வந்தால் நம்மளுக்கு சிறுமை" என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இரவு முப்பது நாழிகையும் போய் விடிந்த பின்பு தாதிகள் எல்லாம் ராச கன்னியை காத்துக் கொண்டிருக்கிறாள் போல் இருந்தார்கள். ஒரு தாதியானவள் ஓடிவந்து ராசாவின் தேவி பாதத்திலே விழுந்து தெண்டனிட்டு எழுந்து சொல்லுவாள், " தாயே நாங்கள் விடிகிற வரையிலும் விழித்திருந்து பலகணி வாசலில் பார்க்கும் போது தூரத்திலிருந்து வரவில்லை நம் பட்டிணத்தில் இருந்த இந்திரபதி கண்ணாளன் கொண்டு வந்த குத்துவிளக்குள்ளே அதிசயம் கண்டு வந்தேன் தாயே" என்று சொன்னாள். அது கேட்டு "இது அதிசயமாச்சு என்று நாம் ராசன் இடத்தில் இனிச் சொல்ல வேண்டும் என்று, நாம் இதை அறிக்கை பண்ணாமல் இருந்தால் ராசனுக்கு வெகு கோபம் பிறக்கும்" என்று இரண்டு தாதிகள் ஓடி வந்து அடியற்ற மரம் போல விழுந்து தெண்டனிட்டபோது பாண்டியராசனும் "ஏதடி தாதி அத்தனை நாள்
இல்லாத அதிசயம் கண்டு வந்தாயோ? பின்னும் உங்களுக்கு ஏதாவது காரியம் உண்டோ?" என்று கேட்கும் போது அந்த தாதியானவள் "நாங்கள் என்ன காரியம் என்று சுவாமி அவர்கள் கூடச் சொல்லுவோம்? என்று தாதியானவள் கூசி நிற்கிற போது ஏண்டி தாதி உங்களுக்கு கெருவமோ?" என்று அதட்டிக் கேட்கும் போது அந்த தாதிகளும் , "சுவாமி அடியாளும் பயந்து சொல்லவோ பயப்படாமல் சொல்லவோ?" என்று திரும்ப ராசாவின் பாதத்தில் விழுந்து வாய் பொற்றி கைகட்டி நிற்கிறதை பார்த்து "அடியே தாதிமாரே, நீங்கள் ஏதொரு காரியத்திற்கும் பயப்பட வேண்டாம். கண்ட காரியத்தை ஒளியாதபடிக்கு உள்ளபடி சொல்" என்று ராசன் கேட்டான் அந்தபடி அப்படி கேட்கும் போது "நாங்கள் கண்ட அவசர காரியங்கள் சொல்லுகிறோம் சுவாமி. நம்ம மதுராபுரி பட்டணத்தில் இருந்த இந்திரபதி கண்ணாளன் கொண்டு வந்த குத்துவிளக்குள்ளே ஒரு அதிசயம் இருக்கிறது சுவாமி" என்று சொல்லி நிற்கிறபோது பாண்டியனும் அதிசயித்து அதில் அதிசயங்கள் வர காரணம் என்ன என்று தன்னுடைய ஆட்களை விட்டு அந்த குத்து விளக்கை எடுத்துக்கொண்டு வரச் சொல்லி ஆட்களையும் தாதிகளையும் அனுப்பித்தான் அப்படியே அவர்களும் போய் பதினெட்டு அறையுள்ள குத்து விளக்கை எடுத்துக் கொண்டு வந்து ராசாவின் முன்பாக வைத்தார்கள். "ஆரடா ஆட்களே! இந்திரபதி கண்ணாளனை கூட்டி வாருங்கள்" என்று அனுப்பினான் அப்போது இந்திரபதி கண்ணாளனும் வீட்டிலே போட்டது போட்டபடியே போட்டுவிட்டு சீமை கடந்து சீமை ஓடிப்போய் மூன்று மாதம் ஆச்சுதென்று ஆட்கள் வந்து சேதி சொல்ல பாண்டியராசனும் வெகு கோபமுற்று தன்னுடைய உக்கிராணம் காத்திருக்கிற காவலாள்களை அழைத்து, "இந்த குத்துவிளக்குள்ளே அதிசயம் இருக்கிறது அதை விடுவியுங்கள்" என்று ஆக்கியாபித்தார் அந்த ஆள்களும் ஓடி வந்து அந்த குத்துவிளக்கையும் பதினெட்டறையையும் வெவ்வேறாக எடுத்து வைக்கும் போது காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனும் கோடிசூரிய பிரகாசம்போல அந்த அறைக்குள் இருக்கிறதைக் கண்டு, கட்டிச்சுருட்டி எடுத்துக் கொண்டு வந்து பாண்டியராசன் முன்பாக வைத்தார்கள். அதிக கோபம் கொண்டு ரெண்டு கண்களும் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து கோட்டை தலைவாசல் காத்திருக்கிற பவனந்தி என்கிற சாம்புவனை கூப்பிட்டு அவன் கையிலே ஒப்புக்கொடுத்து, "இவனை கூட்டிக்கொண்டு போய் ஆனையின் காலிலே இடரிப் போட" சொல்லி ஒப்புக் கொடுத்தான் அதின் பிரகாரம் ராசகுமாரனை தூக்கி மதுராபுரி பட்டண வீதியிலே கொண்டு போய் நிறுத்திக் கொண்டு பாண்டியராசன் பட்டத்து யானை தருவித்து இந்த ராசகுமாரனை கிடத்தி ஆனையை விட்டார்கள். அப்போது அந்த ஆனையும் கிடத்திருக்கிற ராசன் இடத்தில் வந்து தன்னுடைய துதிக்கையாலே எடுத்து மஸ்தகத்தின் மேல் ஏற்றிக்கொண்டு மதுராபுரி பட்டணத்தை வலப்பிரமகச் சுற்றி வந்து தெய்வமுடி பாண்டியராசன் பக்கலிலே சரி சிம்மாசனத்தின் மேல் யானை ஆனது கொண்டு போய் வைத்து தன்னுடைய தும்பிக்கையை எடுத்து கும்பிட்டு நிற்கிறதை சகலரும் பாண்டியராசனும் பார்த்து அதிசயித்து இது தெய்வீக காரணமே அல்லாமல் வேறொன்றல்ல என்று பாண்டியராசனும் பார்த்து, " வாரும் பிள்ளாய் கட்டியக்காரர்களே!" அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் இந்த மூன்று பேர் பிரதானிகள் எழுந்து வரச் சொல்லி ஆட்களை அனுப்பினான். அப்படியே அந்த ஆள்களும் சுவாமி தேவரீர் என்று துதி பண்ணி தெண்டனிட்டு எழுந்து நின்று வாய் பொற்றி கைகட்டி "சுவாமி உங்களை தெய்வமுடி பாண்டியராசன் அருளிப்பாடெ"ன்று சொன்னார்கள். அப்படியே இந்த மூன்று பேரும் ராசன் அழைத்த சங்கதியை கேட்டு திடீரென்று எழுந்திருந்து அனுட்டான முடித்து ராசன் பக்கலுகு வந்து, "எங்களை இன்றைக்கு மூன்று சீக்கிரம் கூட்டிவரச் சொல்லி ஆட்களை அனுப்பிய காரியம் என்ன? அதிசயங்களை கண்டு வரவிடுத்த காரியம்" என்று அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய மும்மூர்த்திகளும் கேட்கும் காலத்தில் இந்த மூன்று பெயர்களையும் பார்த்து, "இனி நாம் என்ன செய்யப் போறோம் குத்துவிளக்கறைக்குள்ளாக இந்தப் பிள்ளையாண்டான் இருந்து கொண்டு களவாண்டு கொண்டிருந்தான். இவனைக் கண்ட மாத்திரத்தில் பவனந்தி என்கிற சாம்புவன் கையில் ஒப்பித்து ஆனையின் காலிலே தலையை இடறிப் போடச் சொல்லிக் கட்டளையிட்டோம். அப்படியே நம்ம பட்டத்து யானை முன்பாக அவனைக் கடத்தி மிதிக்க விட்டபோது அந்த ஆனையும் அங்கிருந்து திடீரென்றோடி வந்து இந்த பிள்ளையின் ___ தன்னுடைய துதிக்கையினாலே தாங்கி எடுத்து உடலில் இருந்த புழுதி எல்லாம் துடைத்து மஸ்கத்தின் பேரில் எடுத்து வைத்துக் கொண்டு பட்டினப்பிரவேசம் நிற்காதபடிக்கு திடீரென்று சரி சிங்காசனமாக நம்மண்டையில் கொண்டு வந்து வைத்துப் போட்டு அதுவும் தன்னுடைய துதிக்கையினாலே அந்தப் பிள்ளை ஆண்டானை கும்பிட்டுக் கொண்டு போயிற்று. இந்த அதிசயங்களை கண்டு தோற்றாத படியினாலே உங்களை அழைத்து வரச் சொல்லி ஆள்களை விடுத்தேன்" என்று பாண்டியன் சொன்னான். அப்போது அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் மும்மூர்த்திகளும் தெய்வமுடி பாண்டியராசனை பார்த்து ஏது சொல்வார்கள் என்றால் "பாருமையா ராசனே அதிசயங்கள் காரணங்கள் எல்லாம் வேறொருத்தரானால் அவர்களுக்கும் பொறுக்காது .ஏதொன்றும் பலியாது. இவரைப் பார்த்ததாயானால் இவருடைய ஆண்மையும் அழகு சௌந்தர்யமும் இவருடைய குணமும் பெருமையும் இவரை பார்த்தாய் ஆனால் வடக்கே வடதேசம் சங்கு தோர்காபுரி அயோத்தி மாநகரம் கோபால வங்கிஷத்து சூரிய குல வங்கிஷம் போலிருக்கிறான். இந்த ராசனும் தன்னுடைய வங்கிஷம் எல்லாம் வர்மம் ஆகி போனபடியினாலே உன்னுடைய சந்திர குல வம்மிஷத்திலே பெண் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய மனதிலேயே எண்ணித்தான் களவினாலே பெண் கொள்ள வேண்டும் என்று வந்தான். இவரும் உமக்குரிய பங்காய் சீமை அதிகாரம் பண்ணுகிற ராசனே அல்லாமல் வேறல்ல.
நாங்களும் எங்களுக்குத் தோன்றி விபரம் காரியம் இது"வென்று மும்மூர்த்திகளும் சொல்ல, அப்போது தெய்வமுடி பாண்டியராசனம் பார்த்து ஏது சொல்வான் என்றால், " நீங்கள் சொன்னது நல்ல காரியம் ஆச்சுது இனிமேல் அப்படியே நானும் நம்முடைய குமாரத்தி கல்யாணம் முடித்து தருகிறேன். இப்பால் நம்முடைய குமாரனுக்கு இவர் கூட பிறந்த ராச கன்னிகையை கொடுக்கிறேன் என்றால் அப்படியே நானும் கொடுக்கிறேன். இது தப்பாது" என்று அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் மும்மூர்த்திகளுடன் அந்த வார்த்தையை சொன்னான். பாண்டியராசனும் அப்படியே சூரிய குலத்துக்காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனையும் பார்த்து, "வாருமையா ராசனே இந்த வார்த்தைகள் எல்லாம் உனக்கு சம்மதியோ அல்லவோ?" என்று கேட்டார்கள். அப்போது காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனும் ஏது சொல்வான் என்றால், " நாமும் எங்கள் வம்சங்கள் எல்லாம் அருகிப்போன படியினாலே மந்திரிமார்கள் பெண் கேட்கச் சொல்லி அனுப்பின விதத்தில் அவர்களை அடித்து துரத்திவிட்டார். அது கண்டு நானும் இப்படியாக கோலம் கொண்டு வந்தேன்" என்று சொன்னார், "பின்பு நீங்களும் ராசனும் சொன்னபடி கேட்கிறேன்" என்று வார்த்தைகளும் சொன்னான். "இனிமேல் உன்னுடைய தங்கையை பாண்டிராசன் குமாரனுக்கு கொடுக்க வேண்டியது. நீரும் இந்த பாண்டியராசன் குமாரத்தியை கொள்ள வேண்டியது" என்று மும்மூர்த்திகளும் சொல்ல, "அப்படி ஆகட்டும்" என்று காஞ்சிப்பெருமாள் என்கிற ராசனும் சொன்னார் அதன் பிறகு சூரிய குலத்துக்கும் சந்திரகுலத்துக்கும் கொள்வினை கொடுப்பினை உண்டாயிற்று. இந்தப் படி காரண காட்சிகள் எல்லாம் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் மும்மூர்த்திகள் உடனே இந்த காரணங்கள் முடிந்தது. அதன் பிறகு தோர்காபுரத்திலே தொப்பூரிந் துறையில் பூங்காவனங்கள் எல்லாம் அவரவர் கூடாரம் போட்டுக் கொண்டிருக்கிற ராசனாகிய திருக்கச்செய வேட்டுவராசனும், திருவேடராசனும் பூவலுவராசனும் காவலுவராசனும் இந்த அஞ்சு பஞ்சவர்ண ராசாக்களையும் சாமியார் சொல்லி கட்டளை இட்ட அருளிய படி நாம் நடந்து கொள்ள வேண்டிய காரணம் என்று தெய்வமுடி பாண்டியராஜன் சொல்லைக் கேட்டு மூவர்களும் யோசித்து பயணம் புறப்பட்டு திருக்கச்சயராசன் இடத்தில் வந்தார்கள்.
இந்த மூவராசாக்களை கண்டு ஐந்து பஞ்சவர்ண ராசாக்களும் மெத்த சந்தோஷத்துடன் மகிழ்ச்சி கூர்ந்து இருந்தார்கள். அப்படி இருந்த பின்பு சடைமுடி சந்நியாசியாக வந்து சுவாமியார் சொல்லி அனுப்பினதும் சரி எங்கள் மூவர் ராசாக்களை சிறையை மீட்டதும் சரி வீரன் உத்தண்டன் அச்சுதன் களப்பாலன் பரசுராமனையும் வெட்டி சங்கரித்து மிருகேந்திரனையும் சங்கரித்ததற்கு இந்த பஞ்சவர்ண ராசாக்களுக்கு என்ன வெகுமதி செய்யப் போகிறோம் என்று மூவர் ராசாக்களும் யோசித்து அஸ்தகடையும் கல் கட்டு மோதிரம் மார்பில் பதக்கம் சரம் துப்பட்டி சோமன் பச்சை வடம் இது முதலான வெகுமானமாய் 81 உடுகரைகளும் செய்த பின்பு சேரன் சோழன் பாண்டியன் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் முன்னிலையாக இந்த மூவர் ராசாக்களும் பின்னும் ஏது சொல்வார்கள் என்றால், "நம்மளும் இந்த ராச்சியத்தில் ராசாக்களிலே பெரியவராக இருக்கத்தக்கதாக நம்ம ராச்சியத்திலே நடுச்சீமையில் நம்ம சூரிய குல வம்சத்தார் சீமையில் தேசம் ஏழு சந்திரகுல வம்சத்தார் சீமையில் தேசம் ஏழு இந்த 14 தேசத்திலும் பங்கு கொடுத்ததற்கு எல்லை விபரம் கோட்டைக்கரை செல்லாண்டியம்மன் கோயிலுக்கு தெற்கு குளித்தலை ஆனைமலை இதற்கு தெற்கு கருமலைத் தொடர்க்கும் தென் சமுத்திரம் தெற்கு ஆனைமலை தொடருக்கும் இதற்கு மேற்கு வாளையாறு காலை நடுப்புறம் வடக்கு மேல் சமுத்திரம் தெற்கு வடக்கு நீலகிரி வெள்ளிப் பொறுப்புகுன்றுக்கு மேல் சமூகத்திற்கு வடக்கு வடக்கு சுப்பிரமணியம் தெற்கு கிழக்கு குமரகாம்புரி கதிர்காம இதற்குக் கிழக்கு காளிமலை கழுகாடு பாறை இதற்கும் கிழக்கு, ஆளிமலைக்கு அப்புறம் என்று நாகமலை தோகைமலை நடுப்புறம் சந்துவரைக்கும் எல்லை என்று இந்த வட்டச்சுத்து 60 நாள் பயணம் என்று குறிப்பாக ஆனைமலை நீலகிரி கொம்புதூக்கி மலைச்சார்பில் வருசந்தோறும் ஆனைவேட்டையாடிக் கொள்ளவும். பொதுவில் இந்தப் படிக்கு நடுச்சீமையில் 14 தேசமும் பகிர்ந்து கொடுத்தோம். இந்த பஞ்சவர்ண ராசாக்களுக்கும் மூவர் ராசாக்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் மற்றுமுள்ள காராள பிரசனங்களும் அறிய ராயர் என்று பெயர் கொடுக்க."
அரி ௐ நன்றாக
குரு வாழ்க
குருவே துணை
வையகநீடுக மாமழை மன்னுக மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்றழைத்தோங்குக தெய்வவெண் திருநீறு சிறக்கவே
ஶ்ரீமது சகலகுண சம்பன்னரான சகலதர்மபிரீதி பரிபாலகரான பந்துசன சிந்தாமணிகரான பதபாக்கிய ப்ரமாணிக்கரான அயிஸ்பரிய சம்பன்னரான ருத்ராக்ஷ மாலிகாபரணரான வெற்றிவாளும் வீரதண்டையும் புலிக்கொடியும் விருதுபெற்றதீரரான வாளரச மணவாள மரபுக்காவலரான வாளுக்குமாலைசூட்டி மணவாளப்பெண்கொண்ட மன்மதகெம்பீரரான மகாதேவரை வரப்பிரசாதம் பெற்றவரான உமையவள் துத்திரி சத்திபாத மறவாதவரான ஒட்டியரை வெட்டி உலகுதிரை கொண்டவரான ரட்டைக்கவரியும் நடனவெம்பரியும் ஒற்றைச்சங்கும் உத்தராக்ஷக்குடையும் பெற்றவரான வச்சிரம் தரித்து மரகதமாலையும் உச்சிதமாக உயர்ந்திடும் வெற்றிவாகைமாலை தரித்தவரான கண்டநாடுகொண்டு கொண்டநாடுயென்று கொடாத மண்டலீகரான அகிலாண்டகோடி பிரமாண்டநாயகரான ஏழுசமுத்திரமும் தரணிமெச்சிடவே சாமத்துரோக வெண்டையமும் படைத்தவரான வில்லுக்கு விஜையரான வேலுக்கு ஆறுமுகரான சொல்லுக்கு அரிச்சந்திரரான அஷ்டதிக்கெங்கும் அரசாளும் மண்டலீகரான சுட்டிறைச்சிதின்று சுனையிலே நீர்குடித்து சிவனுக்கு எச்சிலிட்டு முத்திபெற்ற கண்ணப்பகோத்திர சீர்பாதசேகரரான காளேஸ்த்திரிமலை காவலரான சிவபூசை குருபூசை மறவாதவரானஅரிபத்தி சிவபத்தி அனுதினம் மறவாத அபிமான போசனரான அன்னதானம் சொர்ணதானம் அன்புடன் கொடுப்பவரான வெள்ளிவெண்குடையும் மிகுத்திடும் பூச்சக்கரக்குடையும் படைத்தவரான சிங்கமுகதண்டிகையும் சிவிகையும் பெற்று சீருலகை ஆண்டவரான செல்கச்சிலை கொண்டு வில்வத்திலேறி சிவன்ராத்திரி கண்ட பெரியோர்களான குருகுலத்தரசர் கொற்றவேள் எப்புலியரான முத்தியும் சித்தியும் வழுவாதவரான மகாமேருவுக்குச்சரி சமானமான தீரராகிய திருக்கச்சயராயர் திருவேடராயர் பூவலவராயர் மாவலவராயர் காவலவராயர் சர்வவல்லபராயர் வீரவசந்தராயர் கதம்பவர்ணராயர் கட்டாரிசாழுவராயர் சுரதராயர் குங்குமராயர் ஆகாசராயர் கரியவண்டராயர் கம்பத்துராயர் அல்லாலராயர் விருபாச்சிராயர் மல்லிகார்ச்சுனராயர் முதட்டத்துராயர் உத்தண்டராயர் புலிமுகராயர் அறுமுகராயர் மும்முடிராயர் முடக்கடிராயர் கீழ்முகராயர் படைத்தலைராயர் இன்னுமநேகராயர்களும் லச்சத்தெட்டு வீரர்களும் யிலங்காமாண்டர் கண்டசாத்தர் அகஸ்திய மகாமுனிவர் பத்திரகாளியம்மன் இவர்கள் நாலுபேருதவியாலும் சாட்சாத்காரப்பொருளாய் விளங்காநின்ற சோமசுந்தரக்கடவுள் கிருபையால் பரசுராமன் அச்சயன் களப்பாலன் உத்தண்டன் வீரன் மீருகேந்திரன் என்னும் கொடிய பாதகர்களை செயிக்கும் பொருட்டாய் சோமசுந்தரக்கடவுள் தன்னுடைய சருவவல்லமை அம்சத்தினால் திருக்கச்சயனென்றும் திருவேடனென்றும் பூவலவனென்றும் மாவலவனென்றும் காவலவனென்றும் ஐந்து பஞ்சவர்ண ராசாக்களாகிய தெய்வராசாக்களை உண்டுபண்ணி அவர்களுக்கு என்ன கட்டளையிட்டார் என்றால், "பூலோகத்திலே விடுப்பூரென்னும் பட்டணத்தில் என் சிந்தை மறவாமல் அரசுபுரிந்து இருங்கள்" என ஆக்கியாபித்தார். அந்த உத்திரவை அஞ்சு பஞ்சவர்ண ராசாக்களும் விரசாகவகித்துக்கொண்டு விடைபெற்றெழுந்து விடுப்பூர் பட்டணம்
வந்து ஆறிலொரு கடமை கொண்டு அசையாமணிகட்டி நீதிநெறிமுறை தவறாமல் தனக்கெதிரொருவரில்லாமல் அரசுபுரிந்து வருகிறநாளையில் தேவாலயம் பிறமாலயம் விஷ்ணுவாலயம் இவைகளை யாதொரு தாட்சியும் வாராமல் நடத்துவதும் தவிர கடவுளரிடம் தங்களுக்கு ஏற்படுத்திய விதியில் எள்ளளவேனும் பிசகாமல் முப்பத்திரண்டறமும் வழுவாமல் நடத்தி அரசுபுரிந்திருக்கிற நாளையில், தங்களினத்தார்களும் தாங்களும் முன்குடுமி பூணுனூல் தரித்து சிவபூஜை நேமநிஷ்டைகளும் ஆசாரவுபசாரத்துடன் நடத்தும்போது கொங்குதேசத்து அரசர்களாகிய சேரன் சோழன் பாண்டியன் என்னும் அரசர்களை பரசுராமன் விலங்கிலிட்டு பன்னிரெண்டு வருஷம் அராசுபுரிந்து தனக்கெதிரொருவரில்லாமல் மதோன்மஸ்த்தனாக இருக்கும்போது, சேரன் சோழன் பாண்டியன் இவர்கள் மூவரும் சிறையிலிருந்து என்ன யோசித்தார்களென்றால் ஆயில், " கடவுள் இப்பரசனை செயிப்பதற்க்காக தன்னுடைய அம்சத்தினால்ப் பிறப்பித்த வெட்டுவ ராசாக்கள் விடுப்பூர் பட்டணத்தை அரசுபுரிந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துவந்து இந்த பரசுராமனை செயித்து சிறையை மீட்கவேணும்" என்று ஆலோசித்து, பாண்டியன் தூதாக ஒருவனை அனுப்பினான். அத்தூதன் புறப்பட்டுக் காடுமலை வனம் வனாந்திரம் முதலியதும் தாண்டி பிரமாலயம் வந்துதங்கி
மற்றாநாள் கஞ்சிகாளேஸ்த்திரியை அடுத்து விடுப்பூர் பட்டணத்து எல்லையில் வரும்போது ராசனுடைய காவல் ஆக்ரமித்து நிற்பதைக்கண்டு நாம் எப்படியிக்காவலைக்கடந்து ராசன் சமூகம் போவதென்று எண்ணித்தயங்கி நிற்கும்போது அக்கோட்டையைக் காத்திருக்கும் தூதுவன் நீயார் எங்குவந்தாய் என்றுமயங்கி நிற்கின்றாய் உன் வரலாற்றை வகை விபரமாய் சொல்லென்று கேட்க அத்தூதுவனும் "நான் பாண்டியன் தேசத்து தூதுவன். எங்கள் ராசனால் அனுப்பி இவிடம் வந்தேன். சேரன் சோழன் பாண்டியன் மூவார்களையும் பரசுராமன் விலங்கிலிட்டு சீமையைத்தான் அரசாட்சி செய்கிறான். இந்த இடுக்கை
தீர்க்கும்பொருட்டு உங்கள் ராசனிடத்தில் சொல்லும்படி என்னைத்தூதாக அனுப்பினான் ஆகையால் நான் இவிடம் வந்தேன்" என்று சொல்ல, அக்கோட்டைவாயிலைக் காத்திருக்கும் தூதுவன்கேட்டு, "ஆனால் இக்கோட்டைவாயில் காத்திரு. நான் எங்கள் ராசனைக்கேட்டு உன்னை உள்ளே கூட்டிப்போகிறேன்" என்றான். ஆனால் "அப்படியே ஆகுது" என்று காத்துக்கொண்டிருக்கையில் தூதுவனும் திருக்கசயராசன் முன்புவந்து நின்று, "ராசராச ராசமார்த்தாண்ட ராசவுத்தண்ட ராசகோலாகல ராசபரமேஸ்வரா! நின்னடியினைச்சரணம் சரணமையா. எங்கள் ராசாவே! சேரன் சோழன் பாண்டியனால் அனுப்பப்பட்ட தூதுவன் இவிடம் வந்திருக்கிறான்
என்று சொல்ல, ராசனும் " ஆனால் அவனை இவிடம் அழைத்து வாருங்கள்", என்று சொல்ல அதிசீக்கிரத்தில் அழைத்துவந்துவிட்டார்கள். உடனே தூதுவன் அநேக உபசாரத்துடன் வேண்டிநிற்க ஐந்து பஞ்சவர்ண ராசாக்களும், "நீ யார், எங்கு வந்தாய், வகை விபரமாகச் சொல்லுவாய்", என்று கேட்க, அத்தூதுவனும், " வகைவிபரம் சொல்லுகிறேன், கேளும் சுவாமி", என்று உரைக்கிறான். "தென்தேசத்தில் மதுராபுரிபட்டணத்து சச்சேந்திரதுங்க வரகுணராம பாண்டியராசாவின் வாசல்காக்கும் தூதுவன், அறந்தழைத்த பாண்டியனானவர், ஆரும் எதிரில்லாமல் பட்டணத்தை ஆண்டுவருகிறபோது பரசுராமன் அக்ஷயன் களப்பாளன்
வீரன் உத்தண்டன் இவர்கள் அனைவரும் சேர்ந்து திரண்டுவந்து சேரன் சோழன் பாண்டியன் மூவர்ராசாக்களை விலங்கிலிட்டுச் சிறைவைத்தார்கள் ஆகையினால் தங்களிடத்திற்கு என்னைத் தூதுபோய் நடந்த வர்த்தமானமெல்லாம் சொல்லச்சொன்னார்களய்யா" என்று தூதுவன் சொல்லக்கேட்டு திருக்கச்சயராயன் திடுக்கிட்டு மனந்தேறி "நல்லதாகட்டும்" என்று ஆக்ரமித்து தங்கள் குலத்தாரையழைத்து ஏது சொல்வார். "கேளுங்கள் வீரர்களே! மதுராபுரியை ஆளும் நம்ம பாண்டிய சேர சோழ ராசாக்களுக்கு பரசுராமனென்றொருவனால் சிறை வந்ததென்று ஒரு தூதுவனால் கேள்வியானேன். ஆகையால் நாமெல்லாம் இக்காலத்தில் ஒன்றாய் திரண்டுபோய் அக்கொடிய பாதகர்களை செயித்து மூவராசாக்களுக்கும் முடிசூட்டிவைக்க வேணும்" என்று சொல்லி அகஸ்தியமாமுனிவர், பத்திரகாளியம்மன் பாதசன்னியிதானத்தில் வணங்கி எழுந்து, "சுவாமி, தென்தேசத்துப் பாண்டியன் சேரன் சோழன் இவர்கள் பரசுராமனெனும் கொடிய பாதகனால் சிறை சிரையிருக்கிறார்களாம். அவர்களைச்செயித்து மூவர்களுக்கும் முடிசூட்டவேண்டும்" என்று சொல்லிவேண்டி நிற்க, பத்திரகாளியம்மனும், அகஸ்தியமாமுனிவரும் யோசித்து, " ஆனால் சிவனிட்ட கட்டளையை நம்மால் தடுக்கப்போகாது, ஆனால் சிவபிரானை வரவழைத்து இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, அதின் நம்ம ராசாக்களை படைகூட்டி அனுப்புவதும்தவிர நாமும் போகவேண்டியது" என்று யோசனை செய்து சிவபிரானை நோக்கித் தவசு செய்யுங்கால், சிவபிரானானவர் சடைமுடி சன்னியாசியாகக் கைலை கடந்து உடுப்பூர் பட்டணம் வந்து பத்திரகாளியம்மை அகஸ்தியமாமுனியை நோக்கி, " என்ன யாது காரணத்தால் வேண்டினீர்கள்?" என்று சிவபிரான் கேட்க அம்மையும் அகஸ்தியரும் சிவனுடைய பாதகமலங்களில் தெண்டனும் சமர்பித்து "சுவாமி, தென்தேயத்து சேரன் சோழன் பாண்டியன் எனும் மூவர்ராசாக்களை பரசுராமன் விலங்கிலிட்டு பனிரண்டு வருஷம் சிறையாக வைத்துவிட்டானாம். அது சமாச்சாரம் வேட்டுவராசாக்கள் கேள்விப்பட்டு எங்களிடத்தில் சொன்னார்கள். எங்களுக்கு ஒன்னுந் தோன்றாமையால் தங்களைத்து இதுவிபரம் தெரிந்துகைள்ளவேணுமென்று அழைத்தோம் ஆகையினால், இனி நடக்கும் காரியத்தை திருவுளம் பற்றவேணும்" என்று பத்திரகாளியம்மனும் அகஸ்தியரும் வணங்க, சோமசுந்தரக்கடவுளாகிய சிவபிரான் ஏது சொல்வாரென்றால், "ஆதியில் கற்ப்பனை செய்த பிரகாரம் பரசன் அக்ஷயன் களப்பாளன் வீரன் உத்தண்டன்
என்னும் கொடிய பாதகர்களால் சேர சோழ பாண்டிய ராசாக்களுக்கும் சிறையிருப்பதும் நிசமாகும்" என்று பின்னையும் சொல்லுவார். "ஐந்து பஞ்சவர்ணராசாக்களும் லெட்சத்தெட்டு வீரர்களும் நம்முடைய அம்சத்தினால் பிறப்பித்து யாது காரணத்தினாலென்றால் கொடிய பாதகனாகிய பரசனை செயித்து பாண்டியன் சிறையை மீட்கவென்று உங்களிருவருக்கும் தெரிந்தவிஷயம்தானே? ஆனாலும் இனி நடக்கவேண்டிய காரியங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள்" என்று பின்னையும் சொல்லுவார். "நம்ம வேட்டுவராசாக்கள் தேவராசாக்கள் ஆகையினாலும் ஆச்சாரம் பூசை நேமநிஷ்டை முதலானதும், திரிசந்தியாகாலமும் மறவாதவர்களாகையால், உங்களையும் குலதெய்வமாகப் பாவித்திருப்பதினால், இனிமேல் படைபோய், அக்கொடிய பாதகர்களை செயிப்பதும் நிசமாயிருப்பதினாலும், இனிமேல் அவர்கள் யுத்தசன்னதராவதினால், பூசை பொனக்காரம்
நேமநிஷ்டை இதுகளை திரிசந்தியாகாலமும் முடிக்க அவர்களால் எடுத்து வராது. ஆகையினால் கேளும் பத்திரகாளியே!" என்ற பின்னும் சொல்லுவார். "பூசை நேமம் நிஷ்டையினுடைய பலன் வெட்டுவராசாக்களுக்கு சித்திக்கிறதுக்கு ஒரு பலனுண்டு. அதாவது என்னவென்றால் அநேகம் ராயராகிய வெட்டுவ ராசாக்களில் ஒருவராகிய அக்கினிராயரை அழைத்து அக்கினி குண்டம்
வெட்டி அதில் முழுகிவரச்செய்து அதின்பின்பு வெட்டுவராசாக்கள் நேமநிஷ்டையோடு பூசை செய்கின்ற காளேஸ்த்திரீஸ்வரர், மாணிக்கவாசகர், பத்திரகாளியம்மன் இவைகளை அக்கினிராயரிடத்தில் கொடுக்கும்படி செய்து, வேட்டுவராசாக்கள் படைபோய் அவர்களை ஜெயித்து, சேர சோழ பாண்டியர்களிட விலங்கைத்தரித்து, சிறைமீட்டு முடிசூட்டுவதற்கு ஆயத்தப்படுத்துங்கள்" என்று சொல்லிவிட்டு பத்திரகாளி, அகஸ்தியமாமுனி திடுக்கிடும்படியாய் மறைந்துவிட்டார். அதன்பின்பு பத்திரகாளியம்மன் அகஸ்த்திய மகாமுநிவர் கண்டசாத்தர் இலங்காமாண்பர் ஆகிய இவர்கள் கொலுவில்போய் உட்கார்ந்து வேட்டுவராசாக்களைத்தருவித்து, கொலுவில் வீற்றிருக்கச்செய்து, சிவன் ஆக்கியாபித்த சங்கதியைச்சொல்லி, "நடக்கவேண்டிய காரியங்களை சல்தியில் முடிப்பித்துக்கொண்டு யுத்தசன்னதராய்ப் புறப்படுங்கள் என்று அம்மன் சொல்ல, அப்போது ராசாக்களை காளேஸ்த்திரியில் ஈஸ்பரன் கோவிலுக்கு முன்பாக ஒரு குண்டமொன்று ஏற்படுத்தி, கொலு மண்டபம் ஒன்று உண்டாக்கி, அம்மனுக்குச் சேதி சொன்னார்கள். அம்மனும் அகஸ்தியரும் இலங்காமாண்பர் கண்டசாத்தர் வேட்டுவராசாக்கள் சேர்ந்து ஏககாலத்தில் ஒரே முகமாயித்திரண்டு, காளேஸ்த்திரியில் கொலு மண்டபத்தில் உட்கார்ந்து, அக்கினிராயரை அக்கினியில் முழுகச்செய்து கடவுளுடைய கிருபையால் ஆறுகால்பீடத்தில் உட்காரச்செய்து, ஆசார அபிஷேகமுதலான கிரிகைகளும் செய்து, "வேட்டுவராசாக்களுக்கு இனிமேல் நீரே குலகுரு என்று அறிந்துகொள்ளுங்கள். ஆனால் திருக்காளேஸ்த்திரியீஸ்பரரும் எப்போதூ உங்கள் பங்கிலே பிரியாவிடையாயிருந்து திருவிளையாடல் புரிவார். இது தப்பாது. உமையவளாகிய பத்திரகாளியம்மனும்
அகஸ்திய மாமுனிவரும் ஆகிய நாங்களனைவரும் உங்கள் பங்கில் பிரியாவிடையாயிருந்து திருவிளையாடல் புரிந்து விளையாடுகிறதற்கு சந்தேகமில்லை. இதுவறிந்து கொள்ளுங்கள்" என்று உரைத்து, "திருகாளேஸ்த்திரி சன்னதி முன்பாக உங்கள் குலகுருவாகிய சாமியாருக்கு செப்பேடு பட்டையம் எழுதிக்கொடுக்க"ச்சொல்லி பத்திரகாளியம்மையும் அகஸ்தய மகாரிஷியும் கட்டளையிட்டார். அதே பிரகாரம் மறுபடியும் காளேஸ்த்திரிநாதருக்கு தீர்த்தம் கொண்டுவரச்செய்து, எண்ணெய்காப்பும் சாத்தி அபிசேகம் முடித்து, தூபதீபம் பரிமாறி வேட்டுவராசர் யாவரும்கூட கலியுக சகப்தம் 1875க்கு மேல் செல்லா நின்ற ஆங்கீரீஷ வருஷம்
ஆடி ௴ 18 தேதி சுக்கிரவாரம் திதி தசமியும் பெற்ற பூரணகெறயமான பூச நட்சத்திரமும் பெற்ற நாளில் சிவனுமையாள் தேவாதிதேவர்களறிய வெட்டுவராசாக்களும் லெட்சத்தெட்டு வீரர்களும் கூடி ஒருமைப்பாட்டுடன் எழுதிக்கொடுத்தார். இதற்கு விபரம் உடுப்பூர் மலை முதல் தெற்கு கன்னியாகுமரிமுனை வரையிலும், மேற்கு கிழக்கு இரண்டாயிரத்தறுநூறு காதம்முள்ள வடஞ்சூழ்ந்த தேசத்திற்கு நம்ம குலகுரு சாமியாருக்கு கலியாணம் பணம் அஞ்சு வருஷாவருஷம் காணிக்கை பணம் மங்கிலியத்துக்கு ஒன்னேகால் ரூபாய் மேரைக்கு (அதாவது 5 பணம்) நாங்கள் அனைவரும் கொடுப்போமாகவும்.
இது சொல்லிப்பின்னையும் இந்த செப்பேடு பட்டையத்தை எங்கள் வேட்டுவகுலத்தோரில் யாரானாலும் இகழ்ச்சி செய்வார்களானால், சிவபூசை, குருபூஞை அழித்த தோஷத்திலே போகக்கடவோமாகவும். கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்றதோஷத்திலே போகக்கடவோமாகவும். பெற்ற தாயிக்கு ரண்டகம் பண்ணின தோஷத்திலே போகக்கடவோமாகவும். குருவுக்கு துரோகம் பண்ணின பாவத்திலே போகக்கடவோமாகவும். விஷ்ணுவாலயம், சிவாலயம் அழித்த தோஷத்திலே போகக்கடவோமாகவும். உண்ட வீட்டுக்கு ரண்டகம் பண்ணின பாவத்திலே போகக்கடவோமாகவும். பெற்றபிள்ளையை பெண்டுகாத்த தோஷத்திலே போகக்கடவோமாகவும். இப்படி ஏழு நரகத்தில்போய் அழுந்துவோமாகவும்.
பட்டையக்காளிபாளையம் வேட்டுவர் குலகுரு மடத்துப் பட்டையம் -3 (படி: பொன் தீபங்கர்): மடத்து சிஷ்யராகிய வடகரை நாட்டு சுந்தரராய பட்டக்காரர் செப்பேட்டின் நகல்
பட்டையக்காளிபாளையம் வேட்டுவர் குலகுரு மடத்துப் பட்டையம் -4 (படி: பொன் தீபங்கர்): காங்கய நாட்டுப் பட்டாலி ஆனுவராய பட்டக்காரர் செப்பேட்டின் நகல்
பட்டையக்காளிபாளையம் வேட்டுவர் குலகுரு மடத்துப் பட்டையம் -5 (படி: பொன் தீபங்கர்): கொங்கதேசம் 24 நாடுகள் பாடல், பட்டியல்
கொங்க குலாலரது கொங்கதேசம் 24 நாடுகளது 32 கோத்திரத்தார் பெயர்கள்
அக்கினி ராயர் எனும் பட்டம் கொண்டவர். "பழனிச்சாமி தேசிகர் மடம்" என்று கிரந்த லிபி கல்வெட்டில் உள்ளது. திங்களூர் அப்பச்சிமார் மட வேட்டுவர் உள்ளிட்டோர் குலகுருக்கள்
திங்களூர் அப்பிச்சிமார் மடத்திலும் சாமியார் வீடு என்று குலகுரு பூஜை செய்ய வீடு அப்பிச்சிமார் சந்நிதி அருகிலேயே உள்ளது
சிதம்பர குருக்கள்
(சக்கரை சாமியார்)
காசிவாசி சுப்புரத்தினம் குருக்கள்
(பரம்பரை தர்மகர்த்தா: பட்டையக்காளிபாளையம் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரர் கோயில்)
விலாசம்:
கார்த்திகேய குருக்கள்
(காசிவாசி சுப்புரத்தினம் குருக்கள் மகன்)
பட்டையக்காளிபாளையம்,
ஓடத்துறை கிராமம்,
பவானி தாலுகா,
ஈரோடு.
போன்:
72990 1809195000 53480
.jpeg)
.jpg)

.jpeg)







No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.